இத்தனை வருட சட்டமன்ற வரலாற்றில் கூட்டணி ஆட்சி பற்றி இதுவரை பேச்சு எழுந்ததே இல்லை. அப்படியே சிறிதாய் எழுந்தாலும் இது வரை ஆண்ட கட்சிகளான காங்கிரஸ் , திமுக , அதிமுக அதை பெருசாக வளர விட்டதில்லை. தேசிய கட்சிகளான காங்கிரஸும் , பாஜக வும் பல மாநிலங்களில் கூட்டணி ஆட்சியை நிறுவி இருந்தாலும் இந்த கோரிக்கையை தமிழ்நாட்டில் எழுப்பியது இல்லை.
இப்பொழுது திடீரென எழுந்திருக்கும் கூட்டணி ஆட்சி பற்றிய பேச்சுகளுக்கு முக்கிய காரணம் தவெக தலைவர் விஜய் மட்டும் தான். தவெக தலைவர் தங்களது முதல் மாநில மாநாட்டில் பேசிய கூட்டணி ஆட்சி தொடர்பான பேச்சு தான் இவ்வளவு சலசலப்பிற்கு காரணம்.
விசிக தலைவர் திருமாவளவன் தான் தான் இந்த கோரிக்கையை பல காலமாக பேசிவருவதாக தெரிவிக்கிறார் , ஆனால் அது பெரிதாக பொருட்படுத்தப்பட்டது கிடையாது காரணம் அவரின் கூட்டணி நிலைப்பாடுகளும் அவரிடம் இருக்கும் உண்மையான பலமின்மையும் தான்.
கூட்டணி ஆட்சி இவ்வளவு பேசு பொருளானாலும் அது தமிழகத்தில் செயல்படுத்தப்படுவது மிகவும் கடினம் தான் ஆனால் சாத்தியமற்றது கிடையாது. திமுக வை பொறுத்தவரை அவர்களுக்கு கூட்டணி ஆட்சியில் உடன்பாடு கிடையாது , கூட்டணி வலுவாக இருப்பதாகவே அவர்கள் நினைக்கிறார்கள் எனவே கூடுதல் சலுகைகளை கூட்டணி கட்சிகளுக்கு கொடுக்கவேண்டிய அவசியமும் இல்லை என்று நினைக்கிறார்கள்.
அதிமுக பொறுத்தவரை கூட்டணி அறிவிப்பின் போது, தேசிய ஜனநாயக கூட்டணி தமிழகத்தில் ஆட்சியை அமைக்கும் என்று அமித் ஷா கூறியிருந்தார், ஆனால் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியோ கூட்டணி மட்டும் தான் கூட்டணி ஆட்சி இல்லை என்கிறார்.
ஆகமொத்தம் கூட்டணி ஆட்சி அமைக்க திமுக , அதிமுக என இரு பெரும் ஆண்ட கட்சிகளும் தயாராக இல்லை. அவர்களின் பிரதான கூட்டணி கட்சிகளான காங்கிரசும்கூம் , பாஜக விற்கும் இது வரை எந்த நிர்பந்தமும் ஏற்படவில்லை.
மீதி இருப்பது தவெக மட்டும் தான் , மற்ற சிறிய பெரிய கட்சிகளை தங்கள் கூட்டணிக்குள் கொண்டு வர இந்த கூட்டணி ஆட்சி என்ற சலுகையை பயன் படுத்தலாம். அதிமுக வே கூட கூட்டணி ஆட்சி நிலைப்பாடு பற்றி பேசாமல் தான் இருந்தது , பாஜக கூட்டணி அறிவித்த பிறகு தா எடப்பாடி பழனிசாமியே தனது நிலைப்பாட்டை கூறினார் .
அதிமுக விற்கும் பாஜக விற்கும் கூட கூட்டணி ஆட்சி நிலைப்பாடு ஏற்பட்டிருக்கலாம் ஆனால் அதற்கு ஆதரவான நிலையை தேர்தலுக்கு முன்பு எடுத்தால் அது கூட்டணி பேரத்தில் குழப்பத்தை ஏற்படுத்தும் என்று உடன்பாடு இல்லாதது போல் கூட காட்டி இருக்கலாம்.
திமுக , அதிமுக இருவரும் தங்கள் கூட்டணி பலமாக இருப்பதாக காட்டிக்கொள்வதன் மூலம் கூட்டணி ஆட்சி பற்றிய நிர்பந்தம் இல்லை என்று கூற நினைக்கிறார்கள். ஆனால் தேர்தல் நெருங்க நெருங்க கூட்டணி பேரங்கள் நடைபெறும் தருவாயில் தான் தெரியும் உண்மையான பாரம்.
அனைத்தையும் விட முக்கியமான காரணம் அதிகாரத்தை ருசித்து ஊழலில் திளைத்த இவர்களுக்கு அதை பகிர்ந்தளிக்க கசக்கவே செய்யும்.