காவிரி பிரச்சனை - ஒரு அரசியல் நாடகம்
Photo Source : NDTV
காவிரி நதிநீர் பிரச்சனை பல வருடங்களாக தமிழகத்திற்கும் கர்நாடகத்துக்கும் நடந்துக் கொண்டிருக்கும் பங்காளி சண்டை. பிரச்சனையின் அடிப்படையும் சரி அதில் நடந்துக் கொண்டிருக்கும் சமீபகால நிலையும் சரி எடுத்து பேச ஆரம்பித்தால் நீண்டுக் கொண்டே செல்லும். எனவே ஒரு சாமானியனின் பார்வையிலிருந்து இந்த பிரச்சனை எப்படிப் பட்டதாக இருக்கிறது, அதை சார்ந்து நடக்கும் அரசியல் என்னவாக இருக்கிறது என்பதை மட்டும் எடுத்து வைக்க விரும்புகிறேன்.
கர்நாடக மாநிலம் குடகு மலையில் உற்பத்தியாகும் காவிரி ஆறு கிருஷ்ணராஜசாகர் மற்றும் கபினி என்ற இரு அணைகளை தாண்டி தர்மபுரி மாவட்டம் வழியாக தமிழகத்திற்குள் நுழைந்து மேட்டூர் அணையில் தண்ணீர் சேமித்து வைக்கப்பட்டு கால்வாய் பாசனத்திற்கு ஈரோடு, நாமக்கல் மற்றும் சேலம் மாவட்டங்களுக்கும் டெல்டா பாசனத்திற்கு எடப்பாடி, பவானி வழியாக கரூர், திருச்சி, தஞ்சை மற்றும் நாகை மாவட்டத்தை அடைந்து கடைசியாக கடலில் கலக்கிறது.
Photo Source: Mettur Dam - The New Indian Express
இடையில் பெரம்பலூர், அரியலூர் மற்றும் புதுக்கோட்டை மாவட்டங்கள் உள்பட மொத்தமாக (தோராயமாக) 20 லட்சம் ஏக்கர் வரை விவசாய நிலங்கள் பலனடைகின்றன. பொதுவாக பார்த்தோமானாலே புரியும் இந்த ஆறு எத்தனை மாவட்டங்களுக்கும் எத்தனை லட்சம் விளைநிலங்களுக்கும் வாழ்வளித்துக் கொண்டிருக்கிறது என்று. கடந்த காலங்களிலிருந்து இன்று வரை பார்த்தோமானால் பெரும்பாலுமான நீதிமன்ற மன்ற தீர்ப்புகளும் சரி நடுவர் மன்ற பரிந்துரைகளும் சரி தமிழகத்திற்கு சாதகமாக இருப்பதை உங்களால் பார்க்க முடியும்.
நியாயமான கோரிக்கைகள் தான் வாழ்வாதார பிரச்சனை வேறு ஆனாலும் நீதி கிடைப்பதே இல்லையே ஏன்? கர்நாடக மக்களிடம் பொது கருத்துக்கேட்பு நடத்தினால் கூட நமக்கு தண்ணீர் கிடைத்துவிடும் ஆனால் சில பேர்களே இருக்கும் அரசியல் வா(வியா)திகள் நமக்கு கொடுக்க வேண்டிய முழு அளவு தண்ணீரை தரவே விடமாட்டார்கள். காரணம் அதை சுற்றி அவர்கள் கட்டமைத்து வைத்திருக்கும் நீண்டகால அரசியல் திட்டம் மட்டுமே.
ஒரு பிரச்சனை இருக்க வேண்டும் அது பூதாகரமாக வெடிக்கவேண்டும் அதிலிருந்து மக்களை காப்பாற்றுவதாக காட்டிக் கொள்ள வேண்டும். இது தான் காலம்காலமாக அரசியல் வாதிகள் கடைபிடித்து வரும் மக்கள் ஏமாற்று விதி. கர்நாடகத்தில் தண்ணீரை கம்மியாக திறந்து விட்டால் ஓட்டு, தமிழகத்தில் அதிக தண்ணீரை வாங்கிக் கொடுத்தால் ஓட்டு. அவ்வளவே தான் சங்கதி.
கர்நாடகத்தில் காங்கிரஸ், பாஜக , ஜனதா தளம் என்று யார் ஆட்சிக்கு வந்தாலும் சரி , தமிழகத்தில் திமுக , அதிமுக என்று யார் ஆட்சிக்கு வந்தாலும் சரி ஒரே நிலை தான், ஒரே அரசியல் நிலைப்பாடு தான். காவிரி நடுவர்மன்றம் அமைத்தது, நீதிமன்றங்களில் வாதாடி சாதகமான தீர்ப்புகள் பெற்றது என சில முன்னேற்றங்கள் இருந்தாலும் பிரச்சனையின் மைய தீர்வு எட்டப்படவே இல்லை.
மத்தியில் இரு மாநில ஆளுங்கட்சியும் ஒரே கூட்டணியில் இருந்தாலும் சரி, அரசியல் நெருக்கடிகள் / அழுத்தங்கள் கொடுக்கவோ நிபந்தனைகள் விதிக்கவோ இரு மாநில ஆளுங்கட்சிகளும் தயாராக இல்லை என்பதே உண்மை. உதாரணமாக இதற்கு முந்தைய ஆட்சியில் இங்கு அதிமுக வும், கர்நாடகத்தில் பாஜக வும் ஆட்சியில் இருந்த போது இருவரும் ஒரே கூட்டணி, பெயரளவில் கடிதங்கள் எழுதிக்கொண்டாலும் அழுத்தங்களோ கூட்டணியை பாதிக்கும் அளவுக்கு நெருக்கடிகளோ அதிமுக வும் கொடுக்கவில்லை பாஜக வும் பணிந்துப் போகவில்லை.
அப்பொழுது எதிர்க்கட்சியாக இருந்த திமுக எள்ளி நகையாடியது, திராணியற்ற அரசு என்று கூறி கண்டனங்களை பதிவு செய்தது. சமீபத்தில் தன் கூட்டணிக் கட்சியான காங்கிரஸ் கட்சிக்கு கர்நாடக சட்டமன்ற தேர்தலில் கூட்டணி கட்சி தலைவர்களுடன் சென்று ஒட்டு கேட்டது திமுக. காங்கிரஸ் வெற்றி பெற்று கர்நாடகத்தில் பதவியேற்பு விழா நடந்தப்போதும் முன்னின்று வாழ்த்தியது திமுக.
அப்படியே நிகழ்காலத்திற்கு வந்தோமானால் இப்பொழுது கர்நாடகத்தில் காங்கிரஸ் , தமிழகத்தில் அதன் கூட்டணிக் கட்சியான திமுக. நினைத்தால் உரிமையாக கேட்டோ வருகின்ற நாடாளுமன்ற தேர்தலை முன்னிறுத்தி அழுத்தம் கொடுத்தோ முழு அளவு நீரையும் பெற்றுத் தரலாம் தானே. நடக்காது ஏனென்றால் இருவருக்குமே தெரியும் இது நிறைவேற்றவே முடியாத நிபந்தனை, காரணம் காங்கிரஸ் திமுக விற்கு சாதகமாக முடிவு எடுத்தால் தாங்கள் ஆளுங்கட்சியாக இருக்கும் கர்நாடகத்தில் பாதகமாக முடியும்.
ஆட்சிக்கு வருகின்ற அனைத்து கட்சிகளும் தங்கள் இருத்தலின் சாதகங்களுக்காக செயல்படுகிறார்களே தவிர இதை மக்கள் பிரச்சனையாக மட்டும் பார்த்திருந்தால் ஆட்சியே போனாலும் பரவாயில்லை என்று ஒருத்தராவது இந்நேரம் பிரச்சனையை வென்று எடுத்திருப்பார்கள். இது தீர்க்கவே முடியாத பிரச்சனை இல்லை, ஆனால் இதை தீர்க்காமல் வைத்திருப்பது தான் இரு மாநில அரசியல் கட்சிகளுக்கும் நீண்டகால அரசியல் கொள்கையாக வகுக்கப் பட்டிருக்கிறது.
இது அரசியல் பிரச்சனையோ, விவசாயிகள் பிரச்சனையோ மட்டுமல்ல இது இரு மாநிலத்தில் வாழும் அனைத்து மக்களின் வாழ்வாதார பிரச்சனை. மக்கள் அனைவருக்கும் இந்த பிரச்சனை மட்டுமல்ல நம்மை சுற்றி நடக்கும் ஒவ்வொரு பிரச்சனைக்குமான அடிப்படை புரிதல் வேண்டும். சரியான கேள்விகளை சரியான இடங்களில் கேட்கவேண்டும் அப்பொழுது தான் மாற்றம் பிறக்கும் , நமக்கு நீதி கிடைக்கும்.
நன்றி.