உயரப் பறந்த இந்தியக் குருவி சாலிம் அலி - புத்தக அறிமுகம்
புத்தகம் : உயரப் பறந்த இந்தியக் குருவி சாலிம் அலி ஆசிரியர் : ஆதி வள்ளியப்பன் வெளியீடு : ஓங்கில் கூட்டம் அமைப்பு
இந்தியாவின் குறிப்பிடத்தக்க பறவையியலாளரும் , வனகாதலருமான சாலிம் அலி அவர்களின் வாழ்க்கை குறிப்புகளின் சிறிய தொகுப்பே இந்த மின் புத்தகம். எந்திரன் 2.0 படத்தை பார்த்தவர்களுக்கு நினைவிருக்கலாம் , சாலிம் அலியின் கதாபாத்திரத்தை அதில் பட்சிராஜன் என்னும் வில்லன் கதாபாத்திரமாக சித்தரித்திருப்பார் இயக்குனர் சங்கர் அவர்கள். எந்திரன் படத்தில் காட்டப்படும் சாலிம் அலி அடிப்படையாக கொண்ட விஷயங்கள் அதிகப்படியான கற்பனை கலந்த நிழல் கதாபாத்திரம் அவ்வளவே.
உண்மையில் சாலிம் அலி வேறு வகையானவர். பறவைகளை உற்றுநோக்கி அதன் குணாதிசயங்களை ஆராய்தல் கொஞ்சம் பொழுதுபோக்குடன் கூடிய சாகச செயலே. அதில் மிகவும் தேர்ச்சி பெற்றிருந்தார் சாலிம் அலி. அவர் பள்ளிக்காலம் தொடங்கி அவருடைய முதுமை காலம் வரை அவர் ஆற்றிய ஆராய்ச்சிகள் மிகவும் பிரமிக்கத்தக்கவை , அனைத்து ஆராய்ச்சிகளுக்கு அவர் எடுத்துக் கொண்ட முயற்சிகள் மிகவும் பாராட்டுக்குரியவை.
இந்த புத்தகத்தில் தூக்கணாங்குருவி பற்றிய ஒரு சுவாரஸ்யமான தகவல் இடம்பெற்றிருந்தது அதை இங்கே பகிர்கிறேன். “ தூக்கணாங்குருவிகளில் ஆண் குருவிகள் குடுவை வடிவிலான கூடுகளைக் கட்டுகின்றன. மரங்களிலிருந்து தொங்கிக்கொண்டிருக்கும் அந்தக் கூடுகளுக்கான திறப்பு அடியில் இருக்கும். கூடு கட்டப்பட்டுக் கொண்டிருக்கும்போதே பெண் குருவிகள் வந்து ஆய்வு செய்யும் , கூடு சிறப்பாக இருந்தால் அந்த ஆண் குருவியுடன் ஜோடி சேரும் . பிறகு அந்தப் பெண் குருவி கூட்டில் இருக்கு நிலையிலேயே , எஞ்சிய கூட்டை ஆண் குருவி கட்டிமுடிக்கும் . அதே நேரம் ஒரு கூட்டுடன் ஆண் குருவி நிறுத்திவிடுவதில்லை, 4-5 கூடுகளைக் கட்டி , அத்தனையிலும் வேறுவேறு பெண் குருவிகளுடன் ஜோடி சேரும்”
பறவைகள் , காடுகள் பற்றி படிக்க ஆர்வமுள்ளவர்கள் சாலிம் அலி அவர்கள் எழுதிய புத்தகங்களை நேரடியாக வாங்கி படிக்கலாம் , அல்லது மேலோட்டமாக அறிந்துக் கொள்ள விரும்பினால் இந்த சிறிய மின் நூலை வாசிக்கலாம்.
இயற்கை அழகானது நேசிப்போம் , பாதுகாப்போம். நன்றி.