இன்றைய பொருளாதார சூழலில் ஏழையோ , நடுதரரோ , பணக்காரரோ யாராக இருந்தாலும் கடன் இல்லாத மனிதர்களை பார்ப்பது அரிது, கடனின் அளவு வேண்டுமென்றால் கூட குறைய இருக்கலாம் ஆனால் கடன் இல்லாமல் வருமானத்திற்குள் வாழும் மனிதர்கள் நூற்றில் பத்து பேர் தான் இருப்பார்கள்.
சிலர் தேவைக்காக , அவசர சூழ்நிலை கருதி கடன் வாங்குகிறார்கள் சிலர் ஆடம்பரத்திற்காக , பேராசைக்காக வாங்கி சிக்கி கொள்கிறார்கள். ஓரளவுக்கு பொருளாதாரம் புரிந்தவர்கள் சரியான திட்டமிடலுடன் அதை அறிவுபூர்வமாக கையாண்டு தங்களுக்கு சாதகமாக பயன்படுத்தி கொள்கிறார்கள்.
சிலர் கடன் மேல் கடன் பட்டு அடைக்க வழிதெரியாமல் சிக்கி வாழ்க்கையை இழந்து ஏன் இன்னும் சிலர் உயிரையே இழக்கும் செய்திகளையும் படிக்கிறோம். கடன்களில் நல்ல கடன்களும் உண்டு கெட்ட கடன்களும் உண்டு. வீடு கட்டுவது போன்ற செலவுகளை சம்பாதித்த பணத்தில் மட்டும் கட்டி முடித்து விட முடியாது அதற்கு கடன் வாங்குவதில் தவறில்லை இது நல்ல கடன், தேவையும் கூட.
ஆடம்பரத்திற்காக பொருட்கைளை வாங்கி குவித்து அதற்கு தவணை கட்டுவது கெட்ட கடன். அதை நம்மால் தவிர்த்திருக்கவும் கூடும். நல்ல கடன் , கெட்ட கடன் அதை அடைப்பது எப்படி கடன் வாங்காமல் தவிர்ப்பது எப்படி, கடனை அடைக்கவே முடியாத நிலையில் எப்படி கையாள்வது , கடன் குவியலில் மாட்டாமல் தவிர்ப்பது எப்படி போன்ற அனைத்து விஷயங்களையும் தன் வாழ்க்கை எடுத்துக்காட்டுகளுடன் “Zero EMI“ என்ற புத்தகத்தில் எழுதி இருக்கிறார் ரா.ம.பழனியப்பன் அவர்கள்.
இதுவரை யாரும் பேசாத விஷயங்களுடன் அறிவியல் பூர்வமாக கடன் மேலாண்மை பற்றி விவரித்திருக்கிறார் பழனியப்பன். கண்டிப்பாக உபயோகமாக இருக்கும் விருப்பம் உள்ளவர்கள் வாங்கி வாசியுங்கள்.