எழுத்தே வாழ்க்கை - புத்தக விமர்சனம்
புத்தகம் : எழுத்தே வாழ்க்கை
ஆசிரியர் : எஸ். ராமகிருஷ்ணன்
வெளியீடு : தேசாந்திரி பதிப்பகம்
எழுத்தாளர் திரு.எஸ்.ராமகிருஷ்ணன் அவர்கள் பல்வேறு காலங்களில் எழுதிய கட்டுரைகளின் தொகுப்பே இந்த எழுத்தே வாழ்க்கை புத்தகம். ஒரு எழுத்தாளனின் வாழ்க்கை செல்வம் நிறைந்ததோ , ஏழ்மை நிறைந்ததோ ஆனால் கண்டிப்பாக சுவாரசியம் நிறைந்ததாக தான் இருக்கும். எழுத்தை மட்டுமே தொழிலாக கொண்டு வாழ்க்கையை நடத்தி விட வேண்டும் என்று கரிசல் நிலப்பகுதியிலிருந்து நடைபோட்ட தன் ஆரம்ப கால நினைவுகளுடன் கூடிய கட்டுரையில் தொடங்கி. புத்தகங்கள் மீதான காதல் , தேடி தேடி படித்த காலங்களின் நினைவுகள் , முதல் புத்தகம் அச்சடிக்க போராடிய தருணங்கள் என நிறைய விஷயங்களை பகிர்ந்துள்ளார்.
எஸ்.ராமகிருஷ்ணன் என்றவுடன் என் நினைவுக்கு வருவது அவரின் ரஷ்யா இலக்கியம் மீதான காதலும் அவர் ஒரு பயண பிரியர் என்பதும் தான். அதற்கேற்றாற் போல் அவர் பயணம் செய்த நினைவுகளை நிறையவே பகிர்ந்துள்ளார். ரகுராஜ்பூர், நயாகரா , லூரே கவன்ஸ் , மார்க் டுவின் வீடு , தனுஷ்கோடி , ஜப்பானில் சில நாட்கள் என தன் பயணங்களின் அழகான எண்ண குவியலை கொட்டி தீர்த்துவிட்டார் எஸ்.ரா.
என்னை மிகவும் கவர்ந்தது ஜப்பான் பயணத்தின் நினைவுகள் தான் , ஜப்பான் என்ற நாடு பற்றிய என் பிம்பம் இந்த புத்தகத்திற்கு பிறகு வேறு விதமாக மறு கட்டமைப்பு செய்யப்பட்டுள்ளது. பொருளாதார ரீதியில் நலிந்தவர்கள் உலகை சுற்ற ஒரே வழி புத்தகங்கள் தான், ஒவ்வொரு பயண கட்டுரைகளும் நமக்கு ஒரு பிரயாணம் செய்த நிறைவை தருகிறது.
கூட்ஸு வண்டியில் பயணிக்க வேண்டும் என்ற அவரது விசித்திர ஆசை நிறைவானது பற்றிய கட்டுரை எனக்கு மிகவும் பிடித்திருந்தது , நமக்கும் பல விசித்திர ஆசைகள் தோன்றியிருக்கிறது ஆனால் அவை அனைத்தையும் ஆசையாக மட்டுமே கடந்து விட்டோம் , அந்த ஆசைகளை பூர்த்தி செய்ய முற்பட்டிருந்தால் நமது வாழ்க்கை எவ்வளவு சுவாரஸ்யமான நினைவுகளின் கோர்வையாக இருந்திருக்கும் என்று.
இன்னும் பல சுவாரசியமான நினைவுகளின் கோர்வையாக முப்பது கட்டுரைகளின் தொகுப்பு கொண்ட இந்த புத்தகம் கண்டிப்பாக வாசிப்பு பட்டியலில் சேர்க்க பட வேண்டியவை.
புத்தகம் வாங்க : எழுத்தே வாழ்க்கை