விப்ரோ அஜிம் ப்ரேம்ஜி - புத்தக விமர்சனம்
புத்தகம் : "விப்ரோ" அஜிம் ப்ரேம்ஜி
ஆசிரியர் : என்.சொக்கன்
வெளியீடு : அமேசான் மின்நூல்
இன்று பலதுறைகளில் வெற்றிகரமாக செயல்பட்டு வரும் நிறுவனமான விப்ரோ ஆரம்ப காலகட்டத்தில் வெறும் எண்ணெய் தயாரிக்கும் நிறுவனம் தான். அதன் தற்போதைய தலைவர் அஜிம் ப்ரேம்ஜி யை தெரிந்து கொள்வதற்கு முன் அவருடைய அப்பா MH ப்ரேம்ஜி யை பற்றி தெரிந்து கொள்வது மிகவும் அவசியம்.
விப்ரோ என்ற நிறுவனத்தை தொடங்கி அதை வெற்றிகரமாக கட்டமைத்தவர் MH ப்ரேம்ஜி தான். இந்திய பாகிஸ்தான் பிரிவினையின் போது ஜின்னாவிடம் இருந்து நிதி அமைச்சராக நேரடி அழைப்பு வந்த போதும் , இந்தியா தான் என் தாய் நாடு என்று இங்கேயே இருந்து விட்டார்.
உலக புகழ் பெற்ற ஸ்டான்போர்ட் பல்கலைக்கழத்துக்கு படிக்கச் சென்ற அஜிம் ப்ரேம்ஜி தன் படிப்பை முடிக்க சில மாதங்களே இருந்த நிலையில் தந்தை MH ப்ரேம்ஜியின் தீடீர் மரணத்தால் இந்தியா வந்து சேர்ந்தார். கூடவே விப்ரோவின் பொறுப்புகளும் அவர் மேல் விழுந்தது.
தொழில் பற்றியும் , நிர்வாகம் பற்றியும் துளியும் அனுபவம் இல்லாத ப்ரேம்ஜிக்கு புத்தகங்கள் தான் நிறைய கற்று கொடுத்தது. தன் தந்தையை போன்றே நிறுவனத்தில் சிலருக்கு மட்டுமே விஷயங்கள் தெரிந்திருந்தது , அவர்களை நம்பி மட்டுமே நிறுவனம் இயங்கிக்கொண்டு இருந்தது. தந்தை இறந்த பிறகு தான் திண்டாடியது போல் தான் அவர்கள் இல்லையென்றால் நிறுவனம் திண்டாடிவிடும் என்று யோசித்த ப்ரேம்ஜி, ஒவ்வொரு அனுபவ மேலாளர்களும் தனக்கு பின்பு பொறுப்பை தொடர ஒருவரை தயார் செய்ய வேண்டும் என்று கூறி செயல்படுத்தினார்.
MH ப்ரேம்ஜி ஆரம்பத்தில் வனஸ்பதி தயாரிக்கும் நிறுவனமாக தான் விப்ரோவை நடத்தி வந்தார். ஆனால் சிறிது நாட்களில் சோப்பு கட்டிகளையும் தயாரித்தார். காரணம் வனஸ்பதி தயாரிக்கும் போது வீணாக போகும் ஒரு உப பொருள் தான் சோப்பு கட்டிகள் தயாரிக்க பயன்பட்டது. எனவே அதிலுள்ள வாய்ப்புகளை பார்த்த MH ப்ரேம்ஜி அதை தயாரித்தார் . அதை போல தான் அஜிம் பிரேம்ஜியும் , நல்ல வாய்ப்புகளை பார்த்தார் , இன்று பல துறைகளில் விப்ரோ சாதித்துக்கொண்டு இருக்கிறது.
முதல்முறையாக வாடிக்கையாளர்களுக்கு ஏற்ப சிறு பொட்டலங்களில் (Sachet) பொருட்களை விநியோகிக்கும் உத்திகளை கொண்டு வந்தது , அவருடைய புதிய புதிய பரிசோதனை முயற்சிகள் , அவருடைய நிர்வாக மாற்றங்கள் , அவர் பார்த்த புதிய புதிய கோணங்கள் என நிறைய சுவாரஸ்யமான விஷயங்களை உள்ளடக்கிய புத்தகம் இது.
நீங்கள் தொழிற்முனைவோர் ஆகும் விருப்பமுடையவர் என்றால் இந்த புத்தகம் உங்களுக்கு இரு மடங்காக பரிந்துரைக்கப்படுகிறது.
புத்தகம் வாங்க : "விப்ரோ" அஜிம் ப்ரேம்ஜி