சாதி பெயர்களை நீக்கிவிட்டால் சாதி நீங்கிவிடுமா?
Removing caste names removes caste in the society?
நேற்றைய தினம் சென்னை உயர்நீதிமன்றம் ஒரு தீர்ப்பை வழங்கி இருந்தது , அதாவது அரசு மற்றும் தனியார் கட்டுப்பாட்டில் உள்ள எந்த கல்வி நிறுவனமாக இருந்தாலும் சாதி பெயர்களை தங்கள் நிறுவனத்திற்கு வைக்கக்கூடாது. ஏற்கனவே இருக்கும் சாதி பெயர்களை நீக்க வேண்டும். அதை ஏற்றுக்கொண்டு செயல்படுத்தாத கல்வி நிறுவங்களின் அங்கீகாரம் ரத்து செய்யப்படும் என்று.
கல்வி நிறுவங்களுக்கு சாதி பெயர்களை வைக்கக் கூடாது நீக்க வேண்டும் என்பது மிகவும் வரவேற்கப்பட வேண்டிய விஷயம். சமீப காலமாக கல்வி நிறுவனங்களில் நடக்கும் சாதிய மோதல்களை பார்க்கும் போது இது தான் சரியான நேரம் என்றும் கூட தோன்றுகிறது.
இதன் கூடவே பதிவுத்துறைக்கும் ஒரு நோட்டீஸ் கொடுத்திருக்கிறது அதாவது சாதி பெயரை வைத்து இயங்கும் அமைப்புகளின் பெயரில் உள்ள சாதி பெயரை நீக்குவதோடு அந்த அமைப்புகளின் நன்மை அனைத்து சாதி மக்களுக்கும் சென்று சேருமாறு அந்த அமைப்புகளின் உள் விதிகளை மாற்றம் செய்வதை உறுதிப்படுத்த வேண்டும் என்று.
சாதியை ஒழிக்க சாதி பெயர்களையும் , சாதி சங்கங்களின் பெயர்களையும் அழித்துவிட்டால் போதுமா என்று தெரியவில்லை. தமிழ்நாட்டில் மிகவும் பிற்படுத்தப்பட்ட , தாழ்த்தப்பட்ட சாதிகள் ஏராளம். அவற்றை ஒன்றிணைத்து அவர்களுக்கு நன்மை பெற்று தரும் அமைப்புகளும் இருக்கவே செய்கிறது. சில குறிப்பிட்ட உட்பிரிவை சேர்ந்த மக்கள் மிகவும் நலிந்த நிலையில் இருப்பார்கள் அவர்களுக்கு உதவும் அமைப்புகள் அவர்களுக்காகவே இயங்குகிறார்கள் , அத்தகைய அமைப்புகள் என்ன மாற்றம் கொண்டு வந்தாலும் அவர்களுக்காகவே இயங்க தான் போகிறது.






பெயர்களை மாற்றுவதை தாண்டி இந்த அரசும் , நீதி துறையும் இன்னும் ஆழமாக சிந்திக்க வேண்டி உள்ளது. முதலில் மக்களால் தேர்ந்தெடுக்கப் பட்ட பிரதிநிதிகள் சாதி பெயர்களை போட்டுக்கொள்ள கூடாது , சாதிய மாநாடுகளில் கலந்துக்கொள்ள கூடாது என்பது போன்ற அடிப்படை சமூக முன்னெடுப்புகளை தொடங்க வேண்டும்.
இதில் இன்னொரு சிக்கலும் உள்ளது , யாரை காக்க சாதியை ஒழிக்க நினைக்கிறோமோ அவர்களின் அடையாளங்களும் இதன் மூலம் நீர்த்து போகும். அடையாளம் காணாமல் யாருக்கு யார் உதவப்போகிறார்கள் என்றும் புரியவில்லை.
வெறும் பெயரால் எதுவும் மாறிவிட போவதில்லை! சமூக மாற்றங்கள் தான் தேவை!