ஒரு தோட்டா போதும் ஒரு உயிரை கொல்ல, ஒரு நல்ல நண்பன் போதும் எந்த கடினமான சூழலையும் கடந்து வர அதே போல தான் ஒரு புத்தகம் போதும் ஒருவர் வாழ்க்கையை மாற்றி அமைக்க. அதெப்படி ஒரு புத்தகம் ஒருத்தர் வாழ்க்கையை மாற்றமுடியும் இது என்ன மேஜிக்கா? என்று நீங்கள் கேட்கலாம். ஆம் புத்தகம் ஒரு மேஜிக் தான், உங்கள் வாழ்கைக்குளேயே ஒளிந்துக் கொள்ளும், எதிர்பாராத போது துணை நிற்கும்.
இன்றைய சமூகத்தில் சந்தோஷத்தை காட்டிலும் மனஉளைச்சலையும் , சோர்வையும் தான் அதிகம் தூக்கி சுமக்கிறோம். எல்லா செயல்களுக்கும் குறைந்தபட்ச திட்டமிடல் வேண்டும் தான் ஆனால் அனைத்திற்கும் அதீத சிந்தனை, கவலை என்று நம்மை நாமே துன்பப்படுத்திக் கொள்கிறோம்.
நம்மை நம்மிடமிருந்து காப்பாற்ற புத்தகங்கள் ஒரு ஆகச்சிறந்த அறுமருந்து, வாசிக்கும் பொழுது கேட்காத வார்த்தைகளை கேட்பீர்கள்,புதிய உணர்வுகள் கிடைக்கும், உங்களுக்கு தேவையான பதில்கள் கிடைக்கும், நீண்டநாட்கள் தேடிய விஷயம் உங்கள் சிந்தனையில் உதிக்கும், உங்களை ஆசுவாச படுத்தும், தெளிவாக்கும், உங்கள் பாதையை மாற்றும், இன்னும் நிறைய.
படிக்கும் அனைத்து புத்தகங்களும் உங்களுக்கு உடனடி பலனை கொடுக்குமா என்பது உறுதியல்ல ஆனால் வாழ்க்கையில் ஏதோ ஒரு நாள் எங்கோ ஓரிடத்தில் சகா மனிதரை விட நீங்கள் ஒரு படி மேலே இருக்கக் கூடும் காரணம் நீங்கள் இன்று படிக்கும் புத்தகத்தின் ஏதோ ஒரு விஷயம் / அனுபவம் / குறிப்பிட்ட விஷயத்தில் இருக்கும் தெளிவாக கூட இருக்கலாம்.
தேடி தேடி படித்து பித்து பிடிக்க வேண்டிய அவசியம் இல்லை உங்களுக்கு பிடித்த ஏதோ ஒரு விஷயத்தை பற்றி வாசிக்க ஆரம்பியுங்கள், அந்த முதல் வாசிப்பு அடுத்தடுத்த புத்தகங்களை நோக்கி உங்களை நகர்த்தி செல்லும்.
குவியலாக பாடப்புத்தகங்களை தூக்கி சுமக்கும் நம் சமூகத்தில் வாசிப்பு பழக்கம் நிச்சயமாக பயத்தை தான் ஏற்படுத்தும். கல்வி முறையிலேயே மாற்றம் வேண்டும் தான் ஆனால் பாட புத்தகங்கள் திணிக்கப்பட்டவை , நாம் தேடிப்போகும் புத்தகங்கள் தேவையானவை என்பதை மட்டும் மனதில் பதியவைத்துக் கொள்ளுங்கள்.