மாமன்னன் ரத்னவேல்
சமீபத்தில் வடிவேலு, உதயநிதி, பகத் பாசில் மற்றும் பலர் நடித்து மாரி செல்வராஜ் இயக்கத்தில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றப் படம் மாமன்னன். சினிமா தியேட்டர்களில் வெளியாகி நன்றாக ஓடினாலும், OTT யில் வெளியான பிறகே பேசுபொருளாகி இருக்கிறது. திரைப்படத்தில் எனக்கு பல கருத்துவேறுபாடுகள் இருந்தாலும், படத்தின் மைய கருத்து தேவையானது என்றே கருதுகிறேன். என்றாலும் கூட எப்படி சொல்லியிருக்க வேண்டும் என்பதில் மாரிசெல்வராஜிடம் எனக்கு இருக்கும் ஆணித்தரமான வேறுபாட்டில் எந்த மாற்றமும் இல்லை. படத்தை பற்றிய எனது கருத்தை முகநூலில் ஏற்கனவே பதிவிட்டிருக்கிறேன், இப்பொழுது அது அல்ல விஷயம்.
படத்தின் வில்லன் கதாபாத்திரம் ரத்னவேலுவிற்கு வருவோம். சாதியின் கெளரவம், ஆதிக்க குணம் கொண்ட, தேவை என்றால் காலிலும் விழுகிற தேவை இல்லை என்றால் உயிரையும் எடுக்கின்ற ஒரு வில்லன் கதாபாத்திரம் தான் ரத்னவேல். நியாயமாக பார்த்தால் திரைப்படம் பார்க்கிறவர்கள் வெறுக்க வேண்டிய கதாபாத்திரம் ரத்னவேல். ஆனால் ott யில் வெளிவந்த ஒருசில நாட்களிலேயே ரத்னவேல் கதாபாத்திரம் போற்றுதலுக்குரிய கதாபாத்திரமாக கொண்டாடப்படுகிறது.
மேலும் ஒருபடி மேலே போய் தமிழகத்தில் பல இடைநிலை சாதிகளை சேர்ந்த சிலர் தங்கள் சாதியின் பெயரை போட்டு வெறித்தனமான பாடல்களை வெட்டி ஒட்டி பகத் பாசிலை தங்கள் சாதி சங்க தலைவராகவே ஆகிவிட்டனர். வெறுக்கப்படவேண்டிய ஒரு கதாபாத்திரம் ஏன் கொண்டாடப்படுகிறது? கதை சொல்லப்பட்ட விதம் தவறா? இல்லை இது ஆதிக்க மனப்பான்மையின் வெளிப்பாடா?
மேலே சொன்னது போல் கதாபாத்திரத்தின் குணநலன்களில் சாதியம், ஆதிக்க குணம், கெளரவ ஆணவம் போன்ற சில வில்லனிச விஷயங்கள் இருந்தாலும் அதை விட அழுத்தமாக சில விஷயங்கள் காட்டப்பட்டிருக்கிறது. ரத்னவேல் எந்த பிரச்சனையையும் ஆரம்பிக்க வில்லை, பிரச்சனையை ஆரம்பித்தவர் தன் சகோதரனானாலும் கண்டிக்கும் இடத்திலேயே இருக்கிறார், அரசியலுக்காக என்றாலும் அனைவரையும் அண்ணன் தம்பி என்று கூப்பிடும் இடத்திலேயே இருக்கிறார்.
ஏற்றத்தாழ்வு பார்த்தாலும் எல்லாரையும் தன்னிடமே வைத்திருக்கிறார் (மாற்று சமூக வேலையாட்கள், கட்சிக்காரர்கள்), அவரும் அடங்கி போகும் இடத்தில் ஒரு பெண்ணை (மனைவியை) வைத்திருக்கிறார், தனக்கான அடையாளத்தை (தப்பானாலும்) விட்டுக்கொடுக்காமல் இருக்கிறார், முக்கியமாக மாரி செல்வராஜ் ரத்னவேலு கதாபாத்திரத்துக்கு கொடுத்த கெட்டப் (கெத்தான) - வெள்ளை சட்டை, முறுக்கு மீசை, குங்கும பொட்டு, திமிரான பார்வை, எல்லாத்துக்கும் மேலாக அந்த கதாபாத்திரத்தில் நடித்த பகத் பாசில்.
ஆதிக்க மனப்பான்மை கொண்டவர்கள் கொண்டாடினாலும் பெருமையாக பாடல்களை ஒட்டி எடிட் செய்து பகிர்ந்து வந்தாலும், சாதாரண சினிமா ரசிகனுக்கும் அந்த கதாபாத்திரம் பிடித்ததுனாலயே இவ்வளவு அதிகமாக எடிட் செய்யப்பட்ட பாடல்கள் இணையத்தில் பரவி வருகிறது. இதற்காக மொத்த தமிழ் சமூகத்தையும் சாதி சாயம் பூசி குறை கூறிவிட முடியாது.
ஒருவேளை அந்த கதாபாத்திரத்தில் பகத் பாசிலுக்கு பதிலாக வேறு ஒருவர் நடித்திருந்தால், கதாபாத்திரத்தின் கொண்டாடப்படுகிற குணநலன்கள் குறைவாக காட்டப்பட்டிருந்தால், வடிவேலுவின் கதாபாத்திரத்தில் பாவப்பட்ட குணத்தை குறைத்து, உதயநிதிக்கு வன்முறையின் அளவை கோவத்தின் அளவை குறைத்து நிறைய நடிப்பதற்கான இடத்தை கொடுத்திருந்தால் மாரி செல்வராஜ் நினைத்தது போல் ஒரு தாக்கம் ஏற்பட்டிருக்கலாம்.
ரத்னவேல் கதாபாத்திரத்தை உருவாக்கியவர் மாரி செல்வராஜ், அந்த கதாபாத்திரம் கொண்டாடப்பட்டதில் அவருக்கும் பங்கு இருக்கவே செய்திருக்கிறது. ஏன் என்றால் அவருடைய முந்தைய திரைப்படங்களில் இவ்வாறு நிகழவே இல்லை, அந்த படங்களிலும் வில்லன் கதாபாத்திரங்கள் இருக்கவே செய்தது.
அனைத்துக்கும் மேலாக மக்களுக்கு முழு நல்லவர்களை பிடிப்பதே இல்லை கொஞ்சம் வில்லனிசங்களும் கலந்தவர்கள் தான் இங்கு மாஸ் தலைவர்களாக கொண்டாடப்படுகிறார்கள். மக்களின் இந்த மனப்பான்மையை பற்றி வேறு கட்டுரையில் விரிவாக பார்ப்போம். கதைப்படி வெறுக்கப்பட வேண்டிய கதாபாத்திரம் கொண்டாடப் பட்டுவிட்டது, என்ன கிடக்கிறது கொண்டாடிவிட்டு போகட்டும். அடுத்த முறை சொல்லவேண்டியதை சரியாய் சொல்லிவிட்டு போங்களேன்..!!