காஷ்மீர் பஹல்காமில் நேற்றைய தினம் சுற்றுலா பயணிகள் மீது நடைபெற்ற தாக்குதல் பற்றிய செய்தியை கேட்கும் போதே மனம் பதைபதைக்கிறது. எவனோ ஒருவன் தனது அழிவின் கொள்கைகளை பிரகடனப்படுத்த அப்பாவிகளை கொன்று குவித்திருக்கிறான். இந்த செய்தி இந்தியாவை மட்டுமல்ல ஒட்டுமொத்த உலகத்தையும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.
இறந்தவர்கள் யாருக்குமே இவர்கள் யார் என்றே தெரிந்திருக்க வாய்ப்பில்லை, அவர்களுக்கு எதிராக சிந்தித்திருக்க கூட யோசனை இருந்திருக்காது. தங்கள் நாட்களை சந்தோஷமாக கழிக்க ஆசை ஆசையாய் வந்திருப்பார்கள், எதெற்கென்றே தெரியாமல் உயிரை கொடுத்தும் விட்டார்கள்.
அப்பாவி உயிர்களை காவு வாங்கும் எவரையும் எந்த மதமும் புனிதராக ஏற்பதில்லை. மதத்தின் அடிப்படையில் இந்த தாக்குதல் நடந்திருக்கும் பட்சத்தில் அந்த மதமே உங்களை ஏற்காது, வன்முறையை போதிக்கும் எந்த கொள்கையும் நிலைக்கப்போவதில்லை என்பதை மட்டும் புரிந்துக் கொள்ளுங்கள்.
பதில் தாக்குதல்கள் மட்டும் தீர்வன்றி , அப்பாவி பொது மக்கள் மீது இனி ஒருதடவை கை வைக்கவே பயப்படும் அளவிற்கு அரசின் செயல்பாடுகள் இருக்க வேண்டும். இனி ஒருதடவை சுற்றுலா பயணிகளின் பாதுகாப்புக்கு எந்த சமரசங்களையும் மத்திய மாநில அரசுகள் செய்துக் கொள்ள கூடாது.
மதங்களை கடந்து அன்பால் இணைவோம், மனிதத்தை காப்போம்!