ஒரு விசாவுக்காக காத்திருத்தல் - புத்தக விமர்சனம்
புத்தகம் : ஒரு விசாவுக்காக காத்திருத்தல்
ஆசிரியர் : டாக்டர் .B .R . அம்பேத்கர்
வெளியீடு : மக்கள் கல்வி கழகம் தொகுத்து வெளியிட்ட நூல்

சாதிய ஏற்ற தாழ்வுகள் மற்றும் அதனால் பாதிக்கப்படும் மக்கள் எதிர்கொள்ளும் கொடுமைகளை விவரிப்பதை இரண்டு விதமாக சொல்லலாம் ஒன்று பொதுவாக விளக்கம் கொடுப்பது மற்றொன்று நடந்த சம்பவங்களை எடுத்து கூறி புரியவைப்பது . இதில் இரண்டாவது வகையை சேர்ந்ததே இந்த புத்தகம் .
இந்த புத்தகத்தில் டாக்டர் அம்பேத்கர் அவர்கள் தன் வாழ்வில் நடந்த மற்றும் தனக்கு தெரிந்த சம்பவங்களாக ஆறு சம்பவங்களை குறிப்பிட்டுள்ளார் . முக்கியமாக ஹிந்து மதத்தில் சாதிய ஏற்றத்தாழ்வுகளை விவரிக்கும் அவர் , ஹிந்து மதம் மட்டுமல்ல இஸ்லாம் உள்பட்ட சில மதங்களை சேர்ந்தோருக்கும் இதே மனநிலை தான் உள்ளது என்பதையும் சுட்டிக்காட்டுகிறார் .
தான் சிறுவனாக இருந்த பொழுது , வெளிநாடுகளில் படித்து திரும்பிய பொழுது , பரோடா அரசில் வேலை செய்த பொழுது , விசாரணை அதிகாரியாக இருந்த பொழுது என வாழ்வில் பலதர நிலைகளிலும் அவர் கண்ட அதே ஏற்றத்தாழ்வுகள் , கொடுமைகள் என அந்த கட்டமைப்பு மாறாமல் இருந்ததையும் குறிப்பிடுகிறார் .
கையில் பணம் இருந்த பொழுதும் சரி , நன்கு படித்து கல்வி பெற்றிருந்த பொழுதும் சரி , அதிகாரத்தில் இருந்தாலும் சரி தீண்டாமைக்கு உட்பட்டதாக வேண்டும் என்ற அவலத்தையும் சுட்டி காட்டுகிறார் .
டாக்டர் அம்பேத்கர் அவர்கள் எந்த காழ்ப்புணர்வும் அற்றவர் என்பதை அவர் ஹிந்து மதம் மட்டுமல்ல பிற மதங்களில் உள்ளவர்கள் தீண்டாமை கருதினாலும் சுட்டிக்காட்ட தவறவில்லை என்பதிலிருந்து புரிந்துகொள்ள முடியும் . தீண்டாமை கொடுமைகளுக்கு நடுவே மனிதாபிமானமுடன் நடந்து கொண்டவர்களையும் மேற்கோள் காட்டுகிறார் .
இலக்கு ஒன்றானாலும் (தீண்டாமையை ஒழிப்பது ) அதை அடைய தெளிந்த பார்வை வேண்டும் என்பதற்கு ஐயா அம்பேத்கரை விட சிறந்த வழிகாட்டி இருந்துவிட முடியாது . ஆனால் இன்று அவர் காட்டிய வழியிலிருந்து தவறி , காழ்புணவோடும் , அரசியல் சமரசங்கள் செய்து கொண்டும் வழிமாறும் சில புரட்சியாளர்கள் வரலாற்று கருப்பு பக்கங்களை நிரப்பிக் கொண்டிருப்பது வருத்தத்திற்குரியவைகளே .
ஒன்றிரண்டு மணி நேரத்தில் படித்துமுடித்துவிட கூடிய புத்தகம் , எந்த மனநிலையிலிருந்து இந்த சட்டமாமேதை துளிவிட்டு வந்திருக்கிறார் என்று அறியவிரும்பினால் இந்த சிறிய புத்தகத்தை கண்டிப்பாக படித்து விடுங்கள்.
மின் நூலுக்கு : ஒரு விசாவுக்காக காத்திருத்தல்