நாம் பிறரின் துன்பங்களை உணர்ந்துக் கொள்வதற்கும், பிறரின் குணாதிசயங்கள் நம்மிடம் தொற்றுவதற்கும், பிறருக்கு நடப்பவை நமக்கு நடப்பது போல் உணர்வதற்கும் ஒரே ஒரு நரம்பணு தான் காரணம் என்கிறார்கள். பிறரின் உணர்வுகளை பிரதிபலிப்பதால் அதற்கு கண்ணாடி நியூரான்கள் (Mirror Neurons) என்று பெயரிட்டிருக்கிறார்கள்.
இந்த குறிப்பிட்ட நரம்பணுக்கள் மட்டும் இல்லாமல் போய் இருந்தால் இந்த மனிதர்கள் வாழும் உலகம் எப்படி இருந்திருக்கும் என்று நினைத்து பார்த்தாலே கொஞ்சம் கலக்கமாக தான் இருக்கிறது. பிறருக்கு நடக்கும் துன்பங்கள் நம்மை பாதிக்காமல் இருந்திருந்தால் எவ்வளவு சுயநலம் மிக்க உலகில் வாழ்ந்திருப்போம்?
இந்த கண்ணாடி நியூரான்களை பற்றி எல்லாம் தெரியாமல் இருந்த கடந்த காலங்களில் இந்த திரைப்படங்கள், நாடங்கங்களை எல்லாம் பார்த்து மக்கள் ஏன் இவ்வளவு உணர்ச்சி வசப்படுகிறார்கள், கொண்டாடுகிறார்கள் , தங்கள் திரைநாயகனாகவே தங்களை எண்ணி கொள்கிறார்கள், தங்கள் ஆதர்ச நாயகனை பேசுவதை தங்களை பேசுவது போலவே எண்ணி சண்டை செய்கிறார்கள் என்று.
ஒரு குறிப்பிட்ட நரம்பணுக்களின் சித்து விளையாட்டு தான் இவை அனைத்தும் என்று எண்ணும் போது தான் புரிகிறது உந்துதல் இல்லாமல் எந்த செயலும் இந்த உலகில் நடக்க வாய்ப்பில்லை என்று.