கார்ல் மார்க்ஸ் உடனான குடும்ப வாழ்க்கை பற்றி - ஜென்னி மார்க்ஸ்
புத்தகம் : எங்கள் ஒருநாள் குடும்ப வாழ்க்கை
ஆசிரியர் : ஜென்னி மார்க்ஸ்
பதிப்பகம் : அமேசான் மின்நூல்
உலக பிரசித்தி பெற்ற கம்யூனிஸ்ட் கொள்கைகளை வகுத்தவர்களுள் முதன்மையானவரான கார்ல் மார்க்ஸ் பற்றியும் அவருடைய அரசியல் நிலைப்பாட்டை பற்றியும் நீங்கள் நிறையவே அறிந்திருக்கக் கூடும். கம்யூனிசம் மீதான என்னுடைய முரண்பாடுகள் என்பது நிறையவே உள்ளது இது இன்றைய கம்யூனிஸ்டுகளின் கொள்கை பிடிப்பை , அரசியல் நிலைப்பாட்டை மட்டும் வைத்து அறியப்படும் முரண்பாடுகள் அல்ல , காலத்தின் சுழற்சிக்கேற்ப கொள்கைகளை சீர்படுத்தாமல் விட்டதும் தான். மார்க்ஸ் படிக்கும் காலத்தில் அவருக்கு தோன்றிய அதே கேள்வி தான் என்னையும் உருத்திக் கொண்டிருக்கிறது. பழைய கோட்பாடுகளுக்கும் புதிய எண்ணங்களுக்கு மத்தியில் கொந்தளித்துக் கொண்டிருந்த அதே கேள்வி தான் பழையதை பின்பற்றுவதா அல்ல இன்றைக்கு தேவையான புதிய எண்ணங்களை புகுத்துவதா ?. நமது பழைய நிலையையும் இன்றைய நிலையையும் ஆராய்ந்து தெளிவுபடுவதே இதற்கு பதிலாகும்
அன்றைய காலத்திற்கு மார்க்ஸ் வகுத்த கொள்கைகள் தான் சரி ஆனால் இன்றைய காலத்திற்கேற்ப சீர்படுத்தப் பட்டிருக்க படவேண்டும், செய்யாமல் போனதன் விளைவே கம்யூனிசம் பல நாடுகளில் தேய்ந்து வருகிறது, இந்தியா உள்பட. அது மறுசீரமைப்பு செய்யப்பட வேண்டியது காலத்தின் கட்டாயம். இந்த புத்தகத்தில் நீங்கள் நினைப்பதுப் போல் அரசியல் நிகழ்வெல்லாம் அதிகமாக இடம்பெற்றிருக்காது . இது முழுக்க முழுக்க மார்க்க்சின் குடும்ப வாழ்க்கை பற்றியது
மார்க்க்சின் இளமை பருவம் , ஜென்னியுடனான காதல் , மார்க்க்சின் படிப்பு, திருமணம் , குழந்தைகள் பிறப்பு , குழந்தைகளின் இறப்பு, வறுமை , நோய் , போராட்டம் , அடி , வலி என அரசியலுக்கு அப்பாற்பட்ட மார்க்க்சின் வாழ்க்கையை விவரித்துக் காட்டுகிறது இந்த புத்தகம். வெறும் மூன்று அத்தியாயங்கள் தான், முதல் அத்தியாயம் மார்க்சின் ஆரம்பகாலம் பற்றியது. இரண்டாவது அத்தியாயம் ஜென்னி மார்ஸ் தனது ஒரு நாள் வாழ்க்கை பற்றிய வறுமையான வலிநிறைந்த நிலையை விளக்கி எழுதும் கடிதம். மூன்றாவது அத்தியாயத்தில் ஜென்னி மார்ஸ் தனது சுயசரிதையில் குறிப்பிட்ட மார்க்ஸ் உடனான வாழ்க்கை பற்றிய நினைவுகளின் தொகுப்பு
எனக்கு இந்த புத்தகத்தை படிக்கும்பொழுது பாரதி தான் ஞாபகத்திற்கு வந்தான். அவன் வறுமையில் வாடி , சுதந்தரத்திற்காக போராடி , பல தடைகளுக்குட்பட்டு நிலையில்லா தங்கும் இடமில்லாமல் ஓயாமல் ஓடி கஷ்டப்பட்டு , வழக்குகள் வாங்கி , பத்திரிகையில் எழுதி , புத்தகங்கள் எழுதி , கொள்கையில் சற்றும் மாற்றமில்லாத அதே குணாதிசயம் தான் மார்க்ஸ் அவர்களிடமும் இருந்தது. மாற்றம் அவ்வளவு சுலபமாக வந்துவிடுமா என்ன ? நீங்கள் மார்க்ஸ் ஆகவோ பாரதியாகவோ இருந்து பார்த்தால் மட்டுமே புரியும் மாற்றத்தை விதைப்பது எவ்வளவு பெரிய வேலை என்று
மார்க்ஸ் பற்றிய வேறு பக்கத்தை பார்க்க விரும்பினால் கண்டிப்பாக இந்த புத்தகத்தை வாசித்து விடுங்கள்.