கண்பேசும் வார்த்தைகள் - புத்தக விமர்சனம்
புத்தகம் : கண்பேசும் வார்த்தைகள்
ஆசிரியர் : நா.முத்துக்குமார்
பதிப்பகம் : டிஸ்கவரி புக் பேலஸ்
பாடல் வரிகளில் உருகி உணர்ச்சிப் பெருக்கெடுக்காதவர் நம்மில் யாரும் இருக்க மாட்டார்கள். அது துள்ளல் பாடலோ , சோகம் தழும்பும் பாடலோ , காதல் கசியும் பாடலோ , தத்துவ பாடலோ வாழ்க்கையில் ஏதோ ஒரு சூழலில் நம்மை பாதித்த பாடல்கள் ஒன்றாவது இருக்கும். அப்படி நிறைய பாடல் வரிகள் மூலம் பல லட்சம் பேரையாவது பாதித்திருப்பார் நா.முத்துக்குமார்.
நிராகரிப்பின் வலியை உணரவைத்த "கண்பேசும் வார்த்தைகள்" பாடலாகட்டும் , காதலின் தவிப்பை உணர்த்தும் "காதல் வளர்த்தேன் " பாடலாகட்டும் , பால்யகால நினைவுகளோடு பெண் தோழியை வர்ணிக்கும் "லஜ்ஜாவதியே" பாடலாகட்டும் , துள்ளல் தரும் "தேரடி வீதியில் " பாடலாகட்டும் , நிறைய நிறைய உணர்வுகளை ஆயிரக்கணக்கான பாடல் வரிகளின் மூலம் நம் இதயத்தை வருடியவர் நா.முத்துக்குமார்.
அவர் பாடல் வரிகள் மட்டும் அல்ல , அந்த பாடல்கள் உருவான பின்னணியும் சுவாரஸ்யமானவை தான். இந்த புத்தகத்தில் அவர் எழுதிய பாடல்களில் 25 பாடல்கள் உருவான பின்னணி பற்றியும் , அந்த வரிகளை கோர்க்க அவருக்கு கிடைத்த சில ஸ்வாரஸ்யமான அனுபவங்கள் பற்றியும் எழுதியுள்ளார்.
இந்த புத்தகத்தை படித்து முடித்த பிறகு , இந்த அனைத்து பாடல்களையும் மீண்டும் ஒரு முறை கண்டிப்பாக கேட்பீர்கள். கேட்டு முடித்த பிறகு அந்த வரிகளின் சுவை மேல் ஒரு படி கூடியிருக்கும் என்பதில் சந்தேகமில்லை.
இந்த புத்தகத்தில் இடம்பெற்ற எனக்கு பிடித்த சில வரிகளோடு இந்த கட்டுரையை நிறைவு செய்கிறேன்.
"பனித்துளி வந்து மோதியதால்
இந்த முள்ளும் இங்கே துண்டானது "
"நிலம் நீர் காற்றிலே
மின்சாரங்கள் பிறந்திடும்
காதல் தரும் மின்சாரமோ
பிரபஞ்சத்தை கடந்திடும் "
"ஓர் ஆயிரம் யானை கொன்றால் பரணி !
ஆதலால் யுத்தம் இருக்கு கவனி !" நன்றி !
புத்தகம் வாங்க : கண்பேசும் வார்த்தைகள்