ஜிக்னேஷ் மேவானி நேர்காணல்கள்
Photo Source: Outlook India
எனக்கென்று தனிப்பட்ட அரசியல் நிலைப்பாடுகள் இருந்தாலும், நான் அனைத்து விதமான அரசியல் கோட்பாடுகளையும் அதை நிலைநிறுத்தும் தலைவர்களையும் தெரிந்து, புரிந்துக் கொள்ள வேண்டும் என்று ஆர்வம் கொண்டதால் அவ்வப்போது பல அரசியல் பின்னணிகளை / தலைவர்களை புத்தகமாகவும், மாத இதழ் வாயிலாகவும், இணையதள கட்டுரைகள் வாயிலாகவும் படிக்க நேரிடும். அப்படி சமீபத்தில் நான் படித்த இரண்டு புத்தகங்களில் நான் வாசித்த எனக்கு சுவாரஸ்யமாக தென்பட்ட ஜிக்னேஷ் மேவானியின் மாறுபட்ட அரசியல் கொள்கைகளை விவரிப்பதற்காகவே இந்த கட்டுரையை எழுதுகிறேன்.
ஜிக்னேஷ் மேவானி யார்?
2016 ஆம் ஆண்டு ஜூலை 11ஆம் நாள் தான் அந்த சம்பவம் நடைபெற்றது, குஜராத் மாநிலம் உனா நகரில் மாட்டை கொன்று தோலுரித்ததாக குற்றம்சாட்டப்பட்டு நான்கு தலித் இளைஞர்கள் ஹிந்துத்துவா பின்னணி கொண்ட குண்டர்களால் கடுமையாக தாக்கப்பட்டு தெரு தெருவாக இழுத்துச் செல்லப்பட்டனர். அந்த காணொளி அதிகமாய் பகிரப்பட்டு நாடு முழுவதும் கண்டன குரல்கள் ஒலிக்க தொடங்கின. பல குரல்கள் ஒலித்தாலும் , வழக்கறிஞரான ஜிக்னேஷ் மேவானி என்ற இளைஞனின் குரல் மட்டும் களத்தில் இறங்கி மாபெரும் கூட்டத்தை ஒருங்கிணைத்து அழுத்தமான எதிர்ப்பை பதிவு செய்தது.
அகமதாபாத்திலிருந்து உனா வரை 400 கி.மீ தலித் சுயமரியாதை பயணம் ஒழுங்கு செய்யப்பட்டு பயணத்தின் முடிவில் நடைபெற்ற அந்த மாபெரும் பொதுக்கூட்டத்தில் ஆற்றிய உரை தான் ஜிக்னேஷ் மேவானி என்ற தலைவனின் அச்சாரம். இந்துத்துவ எதிர்ப்பு, தலித் முன்னேற்றம் என்ற சகஜமான தலித் தலைவர்களின் கொள்கைகளை தான் கொண்டிருந்தார் என்றாலும் ஜிக்னேஷ் மேவானி எடுத்துக்கொண்டது சிறிது மாறுபட்ட வழி.
ஜிக்னேஷ் மேவானி வழி
இந்துத்துவா எதிர்ப்பு மற்றும் தலித் பாதுகாப்பு தான் முதன்மையான கொள்கைகள் என்றாலும் அவர் அளித்த பேட்டிகளில் சில விஷயங்கள் எனக்கு அவரை மாறுபட்ட தலைவராகவே வேறுபடுத்திக் காட்டியது. அதை பற்றி பேசுவதற்கு முன் நான் படித்த புத்தகங்களின் விவரங்களை இங்கே பதிவிடுகிறேன். அந்த புத்தகங்களின் வாயிலாக நான் புரிந்துக்கொண்ட ஜிக்னேஷ் மேவானி அரசியலை தான் இங்கே பதிவிடுகிறேன், அவருடைய சமீபகால அரசியல் செயல்பாடுகளை பற்றிய குறிப்புகளை எடுக்கவோ அல்லது ஆய்வுக்கு உட்படுத்தவோ இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.
பாசிசம் பாசிசம்தான் மற்றும் சாதி ஒழிப்பு அரசியலின் புதிய எழுச்சி என்ற இரு புத்தகங்களில் இடம்பெற்ற ஜிக்னேஷ் மேவானி நேர்காணல்களின் தொகுப்புகள் வாயிலாக நான் அறிந்துக்கொண்ட கருத்துக்களை இங்கே பகிர்கிறேன்.
இந்துத்துவா எதிர்ப்பு மற்றும் தலித் பாதுகாப்பு என்ற மைய கொள்கைகளை தாண்டிய வேறு சில கொள்கைகள் அவரை மற்ற தலித் தலைவர்களிடமிருந்து வேறுபடுத்தி காட்டுகிறது குறிப்பாக தலித் விடுதலை என்பது வெறும் தலித் மக்கள் பங்கெடுப்பாக மட்டும் அல்லாமல் தலித் அல்லாதோரையும் சேர்த்த கூட்டு முயற்சியின் உற்பத்தியாக இருக்கவேண்டும் என்றே எண்ணினார். ஒரு படிமேலாக உழைக்கும் மக்களை ஒன்றுதிரட்ட வேண்டும் என்று ஆசைக் கொண்டிருந்தார்.
வரட்டுக்கோட்பாட்டாளராக அல்லாமல் குறிக்கோளை அடைய சில சமரசங்களை செய்துக்கொண்டு நடைமுறைக்குரிய செயல்பாடுகளை மைய கொள்கைகள் நீர்த்துப்போகாத அளவிற்கு முன்னெடுக்க கூடிய தலைவராக யோசித்து செயல்படுகிறார். எந்த சாதியை சேர்ந்தவர்களாக இருந்தாலும் எந்த மதத்தவராக இருந்தாலும் தங்களை ஆதரிக்கும் அனைத்து மக்களையும் நிபந்தனைகளின்றி வரவேற்கின்ற மனோபாவம் கொண்டவராக இருக்கிறார் இது அனைத்து தலித் தலைவர்களிடமும் இருப்பதில்லை.
தலித்துகள் முதலில் அடையாள அரசியல் சிறையிலிருந்தும், உள்சாதி முரண்களிலிருந்தும் வெளிவர வேண்டும்
முக்கியமாக நான் குறிப்பிட விரும்புவது தலித் மக்களை உழைக்கும் மக்கள் என்ற புள்ளியிலேயே இணைக்க விரும்புகிறார் அதற்காகவே தலித்துகள் முதலில் அடையாள அரசியல் சிறையிலிருந்தும், உள்சாதி முரண்களிலிருந்தும் வெளிவர வேண்டும் என்பதை எந்த தயக்கமும்மின்றி ஆழமாக பதிவு செய்கிறார். இன்றைய பெரும்பாலான தலித் தலைவர்கள் அடையாள அரசியலை மட்டும் தான் செய்துக் கொண்டிருக்கிறார்கள் அப்படியிருக்க , அந்த விஷயம் தான் தலித்துகளை வளரவிடாமல் மையநீரோட்டத்திற்கு நகரவிடாமல் கட்டிப் போட்டுவைத்திருக்கிறது என்பதை உணர்ந்ததாலேயே அவரால் இதை கூற முடிந்திருக்கமுடியும்.
“பசித்த வயிறுகளுக்கு நீங்கள் சுயமரியாதையை கற்றுத்தரமுடியாது“
என்பதை ஆணித்தரமாக தெரிவிக்கிறார். பொருளாதார அதிகாரத்துவமே அவர்களுக்கு சுயமரியாதையை பெற்றுத்தரும் என்பதில் தெளிவான புரிதலோடு இருக்கிறார். பெரும்பாலான தலைவர்கள் தலித்துகளுக்கு இந்த பொருளாதார அதிகாரத்துவதை பற்றி எடுத்துக் கூறுவதே இல்லை. அவர்கள் இயலாதவர்களாக இருப்பதே தங்களின் அரசியல் எதிர்காலம் என்று கணக்கு போட்டு திருப்பி அடி, வழக்கு வாங்கு, கெட்டழிந்து போ என்பதுபோலவே அரசியல் செய்துக் கொண்டிருக்கிறார்கள். அந்த வகையில் ஜிக்னேஷ் மேவானி உண்மையிலேயே போற்றுதலுக்குரிய செயல்பாட்டாளர்.
அரசியல் களத்தில் இடதுசாரிகளுடன் அரசியலுக்காக நெருக்கமாகவே பயணிக்கும் தலித் இயக்கங்களுக்கு மத்தியில் , “இடதுசாரிகள் எந்திரத்தனமான வர்க்கப்போரில் தங்களை குறுக்கி கொண்டது என்றும், வரலாற்றில் அது எப்பொழுதும் சாதி பற்றி பேசியதில்லை” என்ற உண்மையையும் வலுவாகவே சாடுகிறார்.
உண்மையை உரக்க சொன்னால் மட்டுமே தெளிவு பிறக்கும், எது உண்மையான தேவை என்பதை சமரசமில்லாமல் புரியவைத்தால் மட்டுமே ஒரு சமூகம் நிரந்தர தீர்வை நோக்கி நகரும் என்பதே எனக்கு தோன்றுகிற முடிவான கருத்து. ஜிக்னேஷ் மேவானி போன்ற சிறிய சிறிய தலைவர்கள் அதுபோன்ற தேவையான ஆக்கபூர்வமான அரசியலை கையில் எடுத்தாலும் எது அவர்களை அதிகார அரசியல் நோக்கி நகரவிடாமல் செய்துக் கொண்டிருக்கிறது என்பது மக்களாகிய நாம் எடுக்கின்ற கூட்டு முடிவின் பலன் என்பதை உணர்ந்துப் பார்த்து சுயப்பரிசோதனை செய்துக்கொண்டு தெளிவான அரசியல் புரிதலோடு முன் சென்றாலே மாற்றம் தானாக நிகழும்.
நன்றி..!!