இறங்குமுகம் | கவிதை
உப்பு காய்த்த உடம்பும் உருகிய தோற்றமும் அழுக்கு துணியும் அலுத்துப்போன முகமும் அநேகமாக அனைத்து சாராய கடைக்கு முன்பும் யாரோ ஒருவனுக்கு பொருந்தி போகிறது
நாள் முழுவதும் சுண்டிய வியர்வையின் ஆன்மா சாராய பாட்டிலில் அடக்கம் செய்யப்பட வலியின் மருந்தாக எடுக்கப்பட்ட பானம் வாழ்க்கையில் நோயாக தொற்றிக் கொள்கிறது
அப்பாவாக, கணவனாக, அண்ணனாக, தோழனாக ஆணுக்கு தான் எத்தனை பட்டங்கள் அனைத்து பட்டங்களும் பிடுங்க பட்டு ஒரே ராத்திரியில் அநாதையாக குடியேறுகிறான் குடிகாரன் என்ற வெளிச்சமற்ற விலாசத்தில்
அப்பாவின் மீசையில் கூசி விளையாட கணவனின் கைக்குள் கதகதப்பை உணர அண்ணனிடம் பேசி ஆசைகளை கூற தோழனின் தோள்களில் ஆறுதல் தேட
கோடி ஜீவன்கள் கொதித்து கிடக்கிறது கேட்க சொல்லி அரசிடமா மனுப்போடுவது? தீபாவளி வசூலும் பொங்கல் வசூலும் ஏற ஏற இவர்கள் வாழ்க்கை தரம் மட்டும் இறங்குமுகத்தில்!!!
மது நாட்டுக்கும், வீட்டுக்கும், உடல்நலத்திற்கும் கேடு விளைவிக்கும்.
No Drinking, liquor drinking is injurious to health..!!