என்னைச் சந்திக்க கனவில் வராதே - புத்தக விமர்சனம்
புத்தகம் : என்னைச் சந்திக்க கனவில் வராதே
ஆசிரியர் : நா.முத்துக்குமார்
வெளியீடு : டிஸ்கவரி புக் பேலஸ்
பொதுவாகவே சுருங்க சொல்லி விளங்க வைக்கும் , சிறிய வரி கவிதைகளை படைப்பதில் பெயர் போனவர்கள் ஜப்பானியர்கள். பெரிய பெரிய பத்திகளை பார்த்து பயந்தோடும் வாசகர்களையும் சிறிய வரி கவிதைகள் அச்சுறுத்துவதில்லை.
இந்த புத்தகத்தில் ஆங்கிலத்தில் மொழிபெயர்ப்பான ஜப்பானிய கவிதைகளை தமிழில் மொழி பெயர்த்துள்ளார் கவிஞர் நா.முத்துக்குமார் அவர்கள். பண்டைய காலம் முதல் தற்கால ஜப்பானிய கவிஞர்களின் கவிதைகள் வரை இப்புத்தகத்தில் இடம்பெற்றுள்ளது.
தேநீர் அருந்தும் நேரத்தில் படிக்க , ருசிக்க அழகிய சிறு புத்தகம். நாற்பத்தி சொச்ச பக்கங்களே கொண்ட இச்சிறிய புத்தகத்தில் மிகவும் சுவாரஸ்யமான விஷயம் , பெரும்பாலான கவிதைகள் பெண் கவிஞர்களால் எழுதப்பட்டது.
பெண் கவிஞர்களின் வரிகளில் , கொஞ்சம் நலினம் கூடி தான் கிடக்கிறது. நியாயம் தானே ?. முழுக்க முழுக்க காதல் கவிதைகள் , செயற்கை தனம் வார்த்தைகளில் கூட கண்டுபிடிக்க முடியவில்லை. எங்கு பார்த்தாலும் , கனவு , நிலவு , கூந்தல் , மலைகள் , காற்று , கார்காலம் என பசுமையான வரிகள்.
மிகவும் அழகான உணர்வுகளை கொடுக்கக்கூடிய புத்தகம் , சிறிய வரி கவிதைகள் தான் புரியும்படியாகவும் இருக்கிறது. கண்டிப்பாக வாசித்து பார்க்கலாம். எனக்கு பிடித்த சிறிய வரிகளுடன் நிறைவு செய்கிறேன்.
குறிப்பு : அங்கங்கே கொஞ்சம் இரவு நேர கவிதைகளும் தென்படும்.
" உன்னைக் காதலிக்காதவளை
நீ விரும்புவது என்பது
கோவிலுக்குச் சென்று
சைத்தானை
வணங்குவது போன்றது "
-------
"கனவில்கூட
என் காதல் அவனுக்குத்
தெரிவதை
நான் விரும்பவில்லை
காலையில்
கண்ணாடியில் பார்க்கையில்
என் முகம் சிவந்திருந்தது "
-------
"விழித்தெழுந்து
சுற்றுப்புறத்தை
கைகளால் தடவுகிறேன்.
என்னைச் சந்திக்க
கனவில் வராதே "
நன்றி.
புத்தகம் வாங்க : என்னைச் சந்திக்க கனவில் வராதே