நான் வாசித்த முதல் நாவல் இது! இந்த இவள்!
பொதுவாகவே நாவல், சிறுகதைகளில் எனக்கு நாட்டம் இல்லை. அரசியல், வரலாறு, கவிதை நூல்களை தான் வாசிப்பது அதிகம். கதைகளை காணொளி வடிவில் பார்க்க தான் விருப்பம். இருந்தாலும் ஒரே ஒரு முறை காமிக்ஸ் புத்தகத்தை முயற்சித்திருக்கிறேன் நல்ல அனுபவம் தான் ஆனாலும் தொடர்ந்து எதுவும் கதை மற்றும் நாவல் சார்ந்த புத்தகங்களை படிக்க ஈடுபாடு வரவில்லை.
சரியாக வார இறுதி வேலை நாளை முடித்து கொண்டு வீடு திரும்பும் போது Higginbothams புத்தக கடை கண்ணில் பட்டது. சென்னை புத்தகக் கண்காட்சியில் வாங்கிய புத்தகங்களே நிறைய இருக்கிறது, அதை படித்து முடிப்பது தான் முதல் இலக்காக இருக்க வேண்டும் மேற்கொண்டு எந்தப் புத்தகத்தையும் வாங்க வேண்டாம் என்று முடிவு செய்திருந்தேன். இருந்தாலும் போய் தான் பார்ப்போமே என்று எண்ணி உள்ளே நுழைந்து விட்டேன்.
Higginbothams ல் ஆங்கில புத்தகங்கள் தான் அதிகமாக இருக்கும். ஆங்கிலத்தில் புதிய வரவுகள் பார்க்க வேண்டும் என்றால் அங்கே கண்டிப்பாக செல்லலாம். நான் நீண்ட நாட்களாக படிக்க ஆசை பட்ட ஒரு ஆங்கில புத்தகம் கண்ணில் பட்டது. எடுத்து முன்னுரைகளை வாசிக்கும் போதே, இந்த புத்தகம் இப்பொழுது வேண்டாம் என்று சமாதானப் படுத்தி கொண்டு நகர்ந்தேன்.
சரி வந்ததற்கு ஒரு சிறிய புத்தகமாவது வாங்குவோம் வார இறுதி வேறு, வீட்டில் உள்ளவர்களுக்கு உடம்பு சரி இல்லை விட்டுவிட்டு வெளியிலும் சுற்றமுடியாது. அப்படியே என் பழைய பாணியில் அரசியல், வரலாறு, கவிதை என்று தேடினேன். சிறியதாக ஈர்க்கும் அளவுக்கு எந்த புத்தகமும் கண்ணில் படவில்லை.
எதற்கும் இருக்கட்டும் என்று கடைசியாக நாவல்கள் இருக்கும் பகுதிக்கு சென்றேன் , ஒவ்வொரு அலமாரியாக பார்த்துக்கொண்டே வர “இந்த இவள்” புத்தகம் கண்ணில் பட்டது. இயல்பான அளவை விட பாதி அளவில் இருந்தது, எழுத்தாளர் பெயரும் நிறைய இடத்தில் கேள்விப்பட்டிருக்கிறேன் பிரபலமான எழுத்தாளர்.
புத்தகத்தை திறந்து பார்த்தல் ஒரு பக்கம் அவர் கையால் எழுதிய எழுத்து பிரதி அச்சிடப்பட்டிருந்தது இன்னொரு பக்கம் சாதாரண அச்சு. சிறிது வாசித்து பார்த்தேன் பிடித்து விட்டது விலை கொடுத்து வாங்கிவிட்டேன்.
இது எனது முதல் நாவல் , வாங்கி சென்ற இரண்டு நாட்களில் படித்து முடித்து விட்டேன். இது குறுநாவல் என்பதால் சில பக்கங்கள் தான் இருந்தது அதிலும் ஒரு பக்கம் கையெழுத்து பிரதி அச்சிட்டிருந்ததால் மிகவும் கம்மியான பக்கங்கள் தான். முதல் நாவல் வாசிப்பிற்கு இது எனக்கு சரியான புத்தகமாக பட்டது.
ஆனால் முதல் முறை புத்தக வாசிப்பாளர்களுக்கு இந்த புத்தகத்தை பரிந்துரைக்க மாட்டேன். காரணம் கரிசல்காட்டு வட்டார மொழி நிறைய இருக்கும் முன் பின் வாசிப்பனுபவம் இல்லாதவர்கள் படித்தால் புரிந்து கொள்வது சிரமம் தான்.
புத்தகத்தை பற்றி பேசினால் நீண்டு கொண்டே போகும் இன்னொரு கட்டுரையில் எழுதுகிறேன்.
நன்றி !