Photo by Andreas ***** on Unsplash
கம்யூனிசம் பற்றிய எனது பார்வை நீண்ட காலமாகவே கொஞ்சம் கொஞ்சமாக பரிணமித்து வந்திருக்கிறது. மேலோட்டமாக பார்த்த காலத்தில் கம்யூனிஸ்டுகள் எனக்கு கதாநாயர்களாக தான் தெரிந்தார்கள், அநியாயத்தை தட்டி கேட்பவர்கள் கதாநாயகர்கள் தானே?
பிறகு இன்னும் கொஞ்சம் அதிகமாக தெரிந்த போது முதலாளித்துவத்தை எதிர்க்கவேண்டும் ஒழிக்க வேண்டும் என்று கருதுகிறார்களே முதலாளிகள் இல்லாமல் மூலம் இல்லாமல் ஒரு பொருளாதாரம் எப்படி உயரமுடியும் ? மக்கள் வாழ்வாதாரம் எப்படி பெருகும் என்ற கேள்வி எழுந்த போது இவர்கள் கண்மூடி தனமாக போராடுகிறார்களோ என்று தோன்றியது.
முதலாளி என்பது ஒரு செயலை அல்லது தொழிலை செய்து முடிக்க தேவையான பணமோ பொருளோ முதலீடு செய்பவர், அப்படி ஒருவர் இல்லாத போது தொழில் எப்படி உருவாகும்? அல்லது தொழிலாளர்கள் எப்படி உருவானார்கள் ? தொழிலாளர்களை வஞ்சித்த முதலாளிகள் இருந்திருக்கிறார்கள் உண்மை தான், அவர்களை எதிர்த்து தொழிலாளிகளுக்கு நீதி பெற்றுக்கொடுத்ததும் கம்யூனிஸ்டுகள் தான் அதில் மாற்று கருத்து இல்லை. ஆனால் அதற்காக முதலாளித்துவ கொள்கையே தவறு என்பதை ஏற்றுக்கொள்ள முடியவில்லை.
ஏன் காலம் முழுக்க மக்கள் தொழிலாளிகளாக தான் இருக்க வேண்டுமா , சம்பாதித்த பணத்தை முதலீடு செய்து முதலாளிகள் ஆக கூடாதா? முதலாளிகளையே ஒழிப்பது சரியா இல்லை நல்ல முதலாளிகளை உருவாக்குவது சரியா? கம்யூனிச பொருளாதார கொள்கை எங்கும் வெற்றி பெறவில்லையே என்ற கேள்வியை எழுப்பினால் எல்லோரும் சீனாவை , ரஷ்யாவை கை காட்டுகிறார்கள், அதன் பின் இருந்த ரத்தம் படிந்த பாசிச வரலாறுகளை பற்றி யாரும் பேசுவதே இல்லை.இன்றைய சீனாவும் , ரஷ்யாவும் முதலீட்டு புலிகள் என்பது வேறு கதை.
இன்றைய இந்திய அரசியலுக்கு வருவோம் , இந்திய அளவில் கூட செல்ல தேவை இல்லை தமிழக கம்யூனிஸ்ட் காட்சிகளை பற்றி பார்க்கலாம் என்றால் இவர்கள் முழுக்க முழுக்க அரசியல் பச்சோந்திகளாக இருக்கிறார்கள். அவ்வளவு மக்கள் விரோத போக்கை தமிழக அரசு கையில் எடுத்தாலும் பெயருக்கு ஒரு போராட்டத்தை செய்து விட்டு மறுநாளே அதே அரசு நிகழ்ச்சியில் பல் இளித்துக்கொண்டு பங்கேற்கிறார்கள்.
இவர்களது மக்கள் நல அரசியல் இவ்வளவு தான் என்று தோன்றிய போது, முழுக்க இல்லாவிட்டாலும் அதிகம் வெறுப்பு தான் வந்தது கம்யூனிஸ்டுகள் மீது. அதற்காக கம்யூனிசம் முழுக்க முழுக்க தேவையில்லாத ஒன்று என்று கண்மூடி தனமாக கூறமாட்டேன். கம்யூனிசம் நிறைய மாறுதல்களுக்கு உட்படவேண்டும், உருவான காலகட்டத்தில் கம்யூனிசம் அன்றைய சூழலுக்கு தொடர்புடையனவாக இருக்கலாம் ஆனால் இன்று அந்த கொள்கையில் காலத்திற்கேற்ற மாற்றங்கள் தேவைப்படுகிறது.
கம்யூனிசம் பற்றிய எனது மேற்கொண்ட கருத்துகளை அடுத்தடுத்த கட்டுரைகளில் எழுதுகிறேன்!