சென்னையில் கல்லூரிகளுக்கு இடையேயான மோதலுக்கு யார் காரணம்?
Who is responsible for college students gang war in chennai?
இன்று நேற்று அல்ல பல வருடங்களாக நடந்துக் கொண்டிருக்கும் பிரச்சனை தான் இந்த கல்லூரி மாணவர்களுக்குள் நடக்கும் யார் பெரியவன் என்ற அதிகார பிரச்சனை. பரவலாக தமிழகம் முழுக்க நடந்தாலும் சென்னையில் தான் இதன் தாக்கம் அதிகம் குறிப்பாக சொல்ல வேண்டும் என்றால் பச்சய்யப்பன் கல்லூரி , மாநில கல்லூரி , நந்தனம் ஆண்கள் கலை கல்லூரி இன்னும் சில கல்லூரிகளின் மாணவர்களுக்கு இடையே நடக்கும் மோதல்கள்.
மாணவர்களிடையே பற்றி எறியும் இந்த வன்முறை கலாச்சாரம் எப்படி எங்கே தொடங்கியது என்று ஆராய்வது மிகவும் அவசியம் , “நோய் நாடி நோய் முதல் நாடி” என்பது போல் பிரச்சனையை சரி செய்ய அதன் மூலம் மிகவும் அவசியம். வன்முறை கலாச்சாரம் ஆரம்பித்தது சரி ஏன் அது சரி செய்ய படவில்லை அல்லது சரிசெய்ய முடியவில்லை? யார் அதை செய்திருக்கவேண்டும் , யார் அதற்கு பொறுப்பு?
யார் பெரியவன் என்ற சண்டை எப்படி வந்தது , அதுவும் கல்லூரி மாணவர்களுக்கு இடையே. அதற்கான காரணங்கள் தொடக்க காலங்களில் எதுவாகவும் இருந்திருக்கலாம் ஆனால் இப்பொழுது தங்கள் சீனியர்கள் விட்டு சென்ற கெத்தை காப்பாற்ற வேண்டும் என்ற முனைப்பு மட்டும் தான் இருந்துக்கொண்டிருக்கிறது.
கல்லூரிக்குள் நடக்கும் சண்டைகள் , கல்லூரிக்கு வெளியே தனி இடத்தில் நடக்கும் சண்டைகள் வேறு ரகம். ஆனால் சமீப வருடங்களில் பொது மக்களுக்கு துன்பம் விளைவிக்கும் அளவுக்கு மாணவர்கள் நடந்து கொள்வது தான் மிகவும் கண்டத்திற்குரிய விஷயம். இது உச்சத்திற்கு போய் கடந்த வருடம் மாநில கல்லூரியை சேர்ந்த 19 வயது மாணவர் கொலையும் செய்யப்பட்டிருக்கிறார்.
ஏதோ சின்ன பிள்ளைகள் மோதிக் கொள்கிறார்கள் என்று கடந்து சென்று விட முடியாது, அந்த மோதல் தான் இன்று உயிரை பறிக்கும் அளவிற்கு சென்றிருக்கிறது. இதற்கு மேலும் இதை சாதாரணமாக எடுத்துக் கொண்டுவிட்டால் கல்லூரி சாலைகள் ரௌடிகளை தயாரிக்கும் தொழிற்சாலைகள் ஆகிவிடும்.
கல்லூரி நிர்வாகங்களும் , அரசும் , காவல் துறையும் என்ன தான் செய்துக் கொண்டிருக்கிறார்கள் என்றே தெரியவில்லை. ஒழுங்கு நடவடிக்கைகள் எவ்வளவு பலமாக இருந்திருந்தால் குற்றங்களை திரும்ப திரும்ப செய்துக் கொண்டிருக்கிறார்கள். மாணவர்களை அடக்க நினைத்தால் ஓட்டு கிடைக்காது என்ற பயமா ? அல்ல மாணவர்களை அரசியல் வாதிகள் வளர்த்து விடுகிறார்களா?
அல்ல சமூக ரீதியாகவே சீர்திருத்தங்கள் தேவைப்படுகிறதா ? காரணங்கள் எதுவாக இருந்தாலும் மாணவர்கள் இப்படி ஆனதிற்கான கூட்டுக் காரணங்கள் பெற்றோர் , கல்லூரி நிர்வாகம், சட்டம் ஒழுங்கு காவல்துறை மற்றும் அரசு. கல்லூரியை விட்டு நீக்குவது, கைது செய்து சிறையில் அடைப்பது, பெற்றோர் கண்டிப்பது இவை எல்லாமும் பயன்படவில்லை என்றால் எங்கு இருக்கிறது பிரச்சனை?
சமீபத்தில் வெளிவந்த டிராகன் திரைப்படத்தில் சொல்வது போல் பொறுக்கியாய் சுற்றுவது கல்லூரி காலத்தில் கெத்தாக தான் இருக்கும் ஆனால் கல்லூரி முடிந்த பிறகு ஒரு நாய் கூட அவனை மதிக்கப் போவதில்லை என்ற உளவியல் உண்மையை , படிப்பு தான் வாழ்க்கை மாற்றத்தை தரும் என்ற நிஜத்தை, வன்முறை அழிவை மட்டும் தான் தரும் என்ற எதார்த்தத்தை சமரசமின்றி அவர்களுக்கு புரியவைக்க முனைப்பு காட்டாதவரை எவ்வளவு பெரிய தண்டனைகளும் அவர்களை மாற்றப்போவதில்லை.
இன்று இதை செய்ய தொடங்காவிட்டால், நாளைய சென்னை கலைக்கல்லூரிகள் ரவுடி பட்டம் பெற நடத்தும் கொலைக் கல்லூரிகளாக மாறிவிடும்.