பால காண்டம் - புத்தக விமர்சனம்
புத்தகம் : பால காண்டம்
ஆசிரியர் : நா.முத்துக்குமார்
வெளியீடு : டிஸ்கவரி புக் பேலஸ்

பால்ய கால நினைவுகளில் முங்கி முத்தெடுக்க நாம் யாருக்கு தான் பிடிக்காது . வாழ்வின் எதோ ஒரு கட்டத்தில் பால்ய கால நினைவுகளின் ஏக்கம் நம்மை துரத்தி கொண்டு தான் இருக்கிறது . அந்த அழகான நினைவுகளின் தொகுப்பு , நம்மை சில நேரம் ஆச்சரியப்படுத்தும் , சில நேரம் நெருடலுக்குள்ளாக்கும் , சில நேரம் குஷி படுத்தும் , சில நேரம் கவலைக் கொள்ள வைக்கும் .
இந்த புத்தகத்தின் வாயிலாக தன் பால்ய காலத்துக்குள் நம்மை கை பிடித்து கூட்டி போகிறார் புத்தகத்தின் ஆசிரியர் கவிஞர் நா.முத்துக்குமார். நம்மில் அநேக பேரை போன்றே கனவில் துரத்தும் கணக்கு வாத்தி , ஏதோ ஒரு கணத்தில் நம்மை கவர்ந்த அக்காக்கள் , ஆச்சர்ய படுத்திய நண்பர்கள் , முதல் அனுபவங்கள் , தீப்பெட்டியில் வைத்து வளர்த்த பொன்வண்டு , ஹார்லிக்ஸ் பாட்டிலில் அடைத்து வளர்த்த தங்க மீன்கள் என இந்த புத்தகத்தில் ஏதோ ஒரு சம்பவமானது நம் பால்ய காலத்தை ஞாபகப்படுத்தாமல் இருக்காது .
இந்த புத்தகத்தில் வரும் நடராஜன் மாஸ்டர் , பாபு , காதல் கடிதங்கள் எழுதி கொடுக்கும் தாஜ்மஹால் தாசன் , புதிது புதிதாக வார்த்தைகளை கண்டு பிடிக்கும் கண்ணன் , பரிமளா அக்கா , 5 ரூபா டாக்டர் என நிறைய பேரு வேறு விதமாக வேறு பெயர்கொண்ட மனிதர்களாக உங்கள் பால்ய காலத்துக்குள் இருக்கும் வேறு சிலர்களையும் உங்களுக்கு ஞாபகப்படுத்தலாம்.
இந்த புத்தகம் மற்றவை போல படித்து கடந்துவிடக்கூடியவை அல்ல , பல நினைவுகளை ஊன்றி எடுக்க பாதாள கொலுசை போலவும் , சில நேரம் அள்ளி எடுக்க ராட்டினம் போலவும் செயல்பட கூடும் . 70 பக்கங்கள் கொண்ட புத்தகம் தான் , ஆனால் நம்மை பல வருடங்கள் பின் நோக்கி கூட்டி போய் விடுகிறது .
புத்தகம் வாங்க : பால காண்டம்