அரசியலற்றவர்களுக்காக
Image Source : Gowri R
அரசியல் பற்றி பேச ஆரம்பித்தால் விவாதிக்க தொடங்கினால் ஆயிரக்கணக்கில் கட்டுரைகள் எழுதலாம். நான் இந்த கட்டுரையை என் தனிப்பட்ட கொள்கைகளின் ஊடாக கொண்டுசெல்ல விரும்பவில்லை, மாறாக எளிய மனிதர்களுக்கான பொதுப் பார்வையிலிருந்து அரசியல் எப்படி பட்டதாக இருக்கிறது என்று எடுத்துக் கூறும் விதமாக கொண்டுச் செல்ல விரும்புகிறேன்.
பொதுவாக ஒவ்வொரு அரசியல் இயக்கங்களும் ஒரு குறிப்பிட்ட கொள்கை அல்லது ஒரு மைய கருத்துடைய பல கொள்கைகளின் மேலாகவே தங்களின் அரசியல் பயணத்தை கட்டமைத்துக் கொள்ளும், உதாரணத்திற்கு திராவிடம், தமிழ் தேசியம் அல்லது தமிழர் முன்னேற்றம்,பாட்டாளிகள் அல்லது தொழிலாளிகளின் முன்னேற்றம், தேசிய வளர்ச்சி, தாழ்த்தப்பட்டோர் / பிற்படுத்தப்பட்டோர் முன்னேற்றம் போன்றதாக இருக்கும்.
அந்த அளவில் இயக்கத்தை கொள்கைகள் மீது கட்டமைத்திருந்தாலும் பெரும்பாலான கட்சிகளின் வளர்ச்சி, கொள்கை பிடிப்பையும் தாண்டி அதை வழிநடத்தும் தலைவர்கள் மீதே சார்ந்திருக்கிறது. முழுக்க முழுக்க தலைவர்களை சார்ந்த இயக்கங்களும் இருக்கவே செய்கின்றன. ஆனால் தலைமை சார்ந்த வளர்ச்சி நிரந்தரமற்றது. நிபந்தனையற்று ஒரு பெறும் மக்கள் கூட்டத்தை ஒன்று திரட்டுவது அல்லது ஒரு கருத்துருவாக்கத்தை சிந்திக்கவைப்பது அதனை பற்றோடு தொடர்ந்து செயல்படுத்த வைப்பது கொள்கை சார்ந்த அரசியல் மட்டுமே.
கொள்கை பிடிப்பின் வீரியம் இன்றும் இருக்க தான் செய்தாலும் அது ஒரு பத்து பதினைந்து வருடங்களுக்கு முன்பு வரை இருந்தது போன்று அதிக வீரியத்துடன் இருக்கிறதா என்றால் நூறு சதவிகிதம் இல்லை. அநேகமாக அனைத்து அரசியல் இயக்கங்களும் தங்கள் கொள்கைகளை ஏதோ ஒரு குறிப்பிட்ட கட்டத்தில் அரசியல் ஆதாயங்களுக்காக அல்லது வாக்கு அரசியலுக்காக அல்லது அதிகாரத்திற்காக தளர்த்திக் கொண்டு தான் பயணப்பட்டுக் கொண்டிருக்கிறது.
உதாரணத்திற்கு மூடநம்பிக்கை ஒழிப்பு பற்றி மேடை தோறும் பேசும் இயக்கங்களும் அதற்கு மாறான செயல்களை அவ்வப்போது வாக்கு அரசியலுக்காக செய்துக்கொண்டு தான் இருக்கிறது, அதி தீவிரமாக மதப்பற்று கொள்கைகளை கொண்ட இயக்கங்களும் அதற்கு நேரெதிரான சித்தாந்தங்களை கொண்ட தலைவர்களை ஒரு கட்டத்தில் தூக்கிப்பிடிக்க தான் செய்கிறது.
தாழ்த்தப்பட்ட/ பிற்படுத்தப்பட்ட மக்களுக்காக இயக்கம் கொண்டவர்களும் கூட்டணிக்காகவோ பதவிகளுக்காகவோ அம்மக்களை சிலசமயம் பலிகடா ஆக்க தான் செய்கிறார்கள், கடுமையான மக்கள் விரோத போக்கு நடந்தாலும் விலைவாசிகள் கூடி சாமான்ய மக்களுக்கு பெரும் துயரை விளைவித்தாலும் கூட ஆளும் கூட்டணி கட்சி என்பதால் மக்களுக்காக நிற்பவர்களும் வாய் மூடி கைகட்டி தான் வேடிக்கை பார்க்கிறார்கள்.
இங்கு அரசியல் என்பது மக்களுக்கானதாக இருந்தது மாறி அதிகாரத்திற்கும் , பணம் சேர்ப்பதற்குமான கருவியாக மாறிவிட்டது. அரசியல் களத்தை நோக்கி செல்பவர்களை எந்த வர்க பிரிவிற்குள்ளும் நான் அடைக்க விரும்பவில்லை, காரணம் அனைத்து வர்க்கத்தில் இருப்பவர்களுக்கும் ஒவ்வொரு தேவைகள் இருக்க தான் செய்கிறது அரசியல் களம் நோக்கி படையெடுக்க.
அடிமட்டத்தில் இருப்பவனுக்கு தன் அடிப்படை வாழ்க்கைக்கான உரிமையை பெற தேவை இருக்கும் அதே சமயத்தில் நடுத்தட்டு வர்க்கத்தில் இருப்பவனுக்கு தனக்கான எதையோ மீட்கவோ நிலைநிறுத்தவோ தேவைகள் இருக்கத்தான் செய்கிறது.மேல்தட்டில் இருப்பவர்களும் சில சமயம் நேரடியாகவோ மறைமுகமாகவோ தனக்கான தகுதியை நிலைநிறுத்திக்கொள்ள அரசியல் களம் நோக்கி நகர வேண்டி தான் உள்ளது.
சில பத்து ஆண்டுகளுக்கு முன் அரசியல் இயக்கத்தில் இணைவது, பணியாற்றுவது, கொள்கைகளை ஊர் தோறும் / கிராமங்கள் தோறும் கூட்டங்கள் போட்டு கட்டமைத்தது, கட்சியில் பொறுப்பு வாங்கியது, மக்கள் பிரதிநிதி ஆனது, மக்களுக்கான சேவையாற்றி அவர்கள் அன்பையும் நம்பிக்கையையும் சம்பாதித்தது என்பது போல் இருந்த அரசியல் வளர்ச்சி இன்று வேறு விதமாக வெற்று நடைமுறையாக மாறி அரசியலின் உச்சம் என்பது மக்களின் அன்பை பெற்றது போய் மக்களின் வாக்குகளை வாங்கும் அளவிற்கு பணம் வைத்திருப்பதாக மாறியுள்ளது.
உதாரணத்திற்கு சில letterpad கட்சிகள் நீங்கலாக அதிக மக்கள் ஆதரவு கொண்ட கட்சிகளின் நகர, பஞ்சாயத்து, ஒன்றிய பதவிகளை கூட இன்றைய காலகட்டத்தில் கொள்கை பிடிப்பு மட்டும் வாங்கிக் கொடுத்துவிடாது. அது பணம், அடுத்த கட்டத்தில் உங்கள் சமூகம்/ மதம், அதற்கு அடுத்தக் கட்டத்தில் மேல்மட்டத்திலுடையவர்களுடனான உங்கள் அடிமை போக்கு, அதற்கடுத்த மட்டத்தில் உங்களுடைய செயல் திறன், அதற்கடுத்த மட்டத்தில் தான் கொள்கை பிடிப்பு மற்றவையென உங்கள் அரசியல் வளர்ச்சியை முடிவு செய்கிறது.
சாதாரண வட்ட அளவிலான பதவிகளை கூட மேல்மட்டத்தில் உள்ளவர்களை காக்கா பிடித்து நாள்தோறும் எங்கள் அண்ணன், ஆசான், தலைவர், வீரர், சூரர் என்று வெற்று பிதற்றல்களை பறைசாற்றி. நிகழ்வுகள் தோறும் சால்வைகளை அணித்து குவித்து வெற்று புகழ்ச்சிகளை உமிழ்ந்து தான் பெறவேண்டி இருக்கிறது.
அரசியல் களத்தில் அனைத்து இயக்கங்களும், தலைவர்களும் கண்டிப்பாக ஏதோ ஒரு இடத்தில் மக்களை விட்டுக்கொடுத்து தான் செல்கிறார்கள். அது எந்த இடம், எந்த சூழலில் என்பது மட்டுமே இங்கு பேசு பொருளாக உள்ளது. அரசியல் களமே அழுக்கான பிறகு யார் குறைவான அழுக்குடன் இருக்கிறார்கள் என்று தேட ஆரம்பித்து விட்டோம். அவர்கள் திருந்துவதற்கான அல்லது மாறுவதற்கான அழுத்தத்தை நாம் கொடுக்கவே இல்லை என்பது தான் பிரதான தவறு.
இயக்கங்கள் சார்ந்த/ பணம் படைத்த/ அதிகாரம் படைத்த அரசியல்வாதிகளை மட்டுமே அங்கீகரிக்கும் போக்கை நாம் மாற்றிக்கொள்ளாமல் மக்களுக்கான பணிகளை உண்மையாக செய்துக்கொண்டிருக்கும் தனிமனிதர்களை/ எளிய தலைவர்களை புறக்கணிப்பதனாலேயே நல்லவர்களிடமிருந்து அந்நியப்பட்டு நிற்கிறோம். அரசியலை வியாபாரமாக லாபநோக்கத்துடன் அணுகும் இயக்கங்களை / தலைவர்களை அந்நியப்படுத்த ஆரம்பிக்கும் காலமே நமக்கான வசந்தக்காலமாக அமையும்.
யார் பின்னாலும் நிற்காத (யார் காலையும் நக்கிப் பிழைக்காத), எதற்காகவும் அஞ்சாத, மக்களின் கோணத்திலிருந்து பிரச்சனைகளை / தீர்வுகளை அணுகக்கூடிய தலைவர்களை வாசியுங்கள், நேசியுங்கள், ஆதரியுங்கள், வளர்த்தெடுங்கள் வளமான அடுத்த தலைமுறையும் நோக்கி பயணப்படுங்கள். அதுவே தனி மனிதனாக நாம் ஒவ்வொருவரும் செய்யவேண்டிய உண்மையான அரசியல்.
நன்றி.