அணையாத ஜோதிபாசு - புத்தக விமர்சனம்
புத்தகம் : அணையாத ஜோதிபாசு
ஆசிரியர் : என்.ராமகிருஷ்ணன்
வெளியீடு : கிழக்கு பதிப்பகம்

தொடர்ந்து ஐந்து முறை மேற்கு வங்கத்தின் முதல்வராக இருந்த ஜோதி பாசுவின் வரலாறு தான் இந்த புத்தகம். அவர் சொந்த வாழ்க்கையை பெரியதாக பதிவு செய்யவில்லை என்றாலும் அவருடைய பொது வாழ்க்கையை வைத்து அவருடைய பண்பை கண்டிப்பாக கணித்துவிட முடியும் .
கம்யூனிச தலைவரான ஜோதிபாசு இந்தியாவில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியை தோற்றுவித்தவர்களில் ஒருவர் . பிரிட்டிஷ் இந்தியாவில் தொடங்கி சுதந்திர இந்தியா வரை அவர் கடந்து வந்த போராட்டங்கள் , வலிகள் , இழப்புகள் , கனவுகள் அனைத்தும் விவரிக்க பட்டுள்ளது.
இந்த புத்தகம் ஜோதிபாசுவின் வரலாறு மட்டுமின்றி , இந்தியாவில் கம்யூனிஸ்ட்களின் வரலாறு, கம்யூனிச இயக்கங்களுக்குள்ள கருத்து வேறுபாடுகள் , மேற்கு வங்கத்தின் அரசியல் சூழ்நிலைகள் , தொழிற்சங்கங்களின் கட்டமைப்புகள் பற்றிய விவரங்களும் நிறைய பகிரப்பட்டுள்ளது .
பொதுவாகவே கம்யூனிஸ்டுகளின் மைய நோக்கம் தொழிலாளர்கள் நல்லனாக தான் இருக்கும் , அது சில இடங்களில் கண்மூடி தனமாகவும் மூர்கமாகவும் இருக்க கூடும் . ஆனால் ஜோதி பாசு மற்ற கம்யூனிஸ்ட்களிடம் இருந்து மாறுபட்டவர் , தொழிலாளர்கள் தங்கள் உரிமையை ஒருகாலமும் விட்டுக்கொடுக்காமல் தங்கள் உரிமையை போராடி பெற்று விடவேண்டும் என்ற ஆழ்ந்த எண்ணம் உடையவராக இருந்தாலும் , அதை அவர் கண்மூடி தனமாக செய்யவில்லை.
சில தொழிற்சங்கங்களின் சர்வாதிகார போக்கையும் அவர் எதிர்த்து கேட்க அஞ்சவில்லை . பொருளாதாரம் பற்றிய பரந்த பார்வை அவரிடம் இருந்தது , தொழிலாளர்கள் மட்டுமின்றி தொழிற்முனைவோர்களையும் காக்க எண்ணிய கம்யூனிஸ்டகாரர் என்ற வகையில் ஜோதிபாசுவின் தேசிய பொருளாதார பார்வையும் புலப்படும் .
இன்று மாநிலங்களின் அதிகார உரிமைகள் பற்றி நிறைய பேர் பேசலாம் , ஆனால் தன் முதல் ஆட்சிக்காலம் முதலே மாநிலங்களின் உரிமைக்காக குரல் கொடுத்து பல்வேறு மாநில முதல்வர்களை கூட்டி செயலிலும் அதற்கான அழுத்தத்தை பதிவு செய்தார் .
மக்களுக்காக வாழ்ந்த தலைவர்கள் இந்தியாவில் வெகுசிலரே , அதில் கண்டிப்பாக குறிப்பிட வேண்டியவர் ஜோதி பாசு. அரசியலுக்கு அப்பாற்பட்டு சித்தாந்தங்களுக்கு அப்பாற்பட்டு படிக்க வேண்டியவர் (அணையாத) ஜோதி பாசு.
புத்தகம் வாங்க : அணையாத ஜோதிபாசு