வைகிங்ஸ்சும் நமது வரலாறும்
வைகிங்ஸ்
2013 முதல் 2020 வரை 6 சீசன்’களாக வெளிவந்து வெற்றிகரமாக ஓடி பெரும் வரவேற்பை பெற்ற தொலைக்காட்சி தொடர் தான் வைகிங்ஸ். இன்றைய நார்வே, ஸ்வீடன், டென்மார்க் மற்றும் அதனுடன் தொடர்புடைய இன்னபிற நாடுகளில் 13ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த நார்ஸ் இன மக்களின் வாழ்க்கை முறை, கலாச்சாரம், இறை நம்பிக்கை, போர் முறை, குடும்ப அமைப்புமுறை, பெண்களுக்கு அவர்கள் கொடுத்த இடமும் விடுத்த இடமும், வீரம், காதல் என அனைத்து பாங்கும் கொண்ட ருசீகரமான வரலாற்று புனைவு தொடர்.
விவசாயியாக இருந்து போர் வீரனாக மாறிய ராக்நார் லாத்போர்க் என்ற கதாநாயகனை முன்னிறுத்தியே கதை நகரும். அவனுக்கு பிறகு அவன் பிள்ளைகள் அந்த இடத்தை பிடித்தார்களா என்ன ஆனார்கள் என்பது தான் மொத்த தொடரின் சுருக்கம்.
இயற்கையாகவே கடலை ஒட்டியே அவர்களின் வாழ்விடம் அமைந்திருந்ததால் காடும் கடலுமே கதைக்களம். மிகவும் காட்டு மிராண்டித்தனமான வாழ்வியலை கொண்டிருந்தாலும், ரத்தத்துக்கு ரத்தம் தேவைக்கு காமம் என்று கண்மூடித்தனமாக வாழ்ந்து வந்தவர்களானாலும் காதல், பாசம், நட்பு மட்டும் அவர்களிடம் ஆழமாக அழகாக இருந்துள்ளது பெரும் ரசிப்புக்குள் ஆழ்த்துகிறது.
எந்த நிலப்பரப்பானாலும் யாருடைய வரலாறானாலும் இன்று வரை காதல், பாசம், நட்பு கொண்டுள்ள அந்த ஆழம் மாறாமல் இருப்பதே மனித இனம் பெற்ற பெரும் கொடை. தொடர் முழுவதும் அதிகார போட்டியும், திடீர் படையெடுப்புகளும், போர் முனைகளும், சாக்சன்ஸ் என்று கூறப்படுகிற வெள்ளையர்களுடனான பகையும் தான் அதிகமாக காட்சியாக்க பட்டிருக்கிறது.
வைகிங்ஸ் வல்ஹல்லா
வைகிங்சின் அதே கதைக்களத்தில் அந்த முந்தைய கதையின் நூறாண்டுகளுக்கு பிறகு நடக்கும் வரலாற்று புனைவாக காட்சியாக்க பட்டு 2022 ஆம் ஆண்டு முதல் தொடங்கி இரண்டு சீசன்களை வெற்றிகரமாக முடித்திருக்கிறது வைகிங்ஸ் வல்ஹல்லா.
இந்த தொடரில் நூறு ஆண்டுகளுக்கு பிந்தைய அவர்களின் வாழ்க்கை முறை மாற்றங்கள் தெளிவாக ஊடறுத்து காட்டப்பட்டிருக்கும். முக்கியமாக அவர்கள் கிறிஸ்தவ மதத்திற்கு மாற ஆரம்பித்த பின்பு அவர்களுக்குள் ஏற்பட்ட மாற்றங்கள் , முரண்கள் சுவாரஸ்யமான முடிச்சுகளுடன் கதையாக்கப்பட்டிருக்கிறது.
கடல் கடந்து பல தேசங்களை அவர்கள் சுற்றிவர ஆரம்பித்தார்கள். காட்டுமிராண்டித்தனம் மட்டும் பெரிதாய் மாறாமல் போயிருந்தாலும் கண்மூடித்தனங்கள் அவ்வளவாய் காட்டவில்லை. வைகிங்ஸ் மாதிரி அல்லாது இந்த தொடரில் நிறைய முக்கிய கதாபாத்திரங்கள் இடம்பிடித்திருந்தது கூடுதல் சுவாரஸ்யம்.
நமது வரலாறு
இந்த தொடர் மட்டுமல்லாது எந்த வரலாற்று தொலைக்காட்சி மற்றும் இணையதள தொடர்களை பார்க்கும்போதும் எனக்கு இந்த கேள்வி மட்டும் எழாமல் இருந்ததே இல்லை.
“எவ்வளவோ வரலாறும், சிறப்பும் இருந்தும் ஒன்று இரண்டு திரைப்படங்களை தவிர ஏன் இன்னும் நமது வரலாறு பெரிதாய் படமாக்கவில்லை அல்லது தொடராக வெளி வரவில்லை?”
நமது நிலப்பரப்பில் வரலாற்று தொடர்களுக்கு பெரிதாக மெனக்கெடக்கூடிய படைப்பாளிகள் இல்லாமல் போய்விட்டார்களா என்ன? நஷ்டம் ஏற்பட்டுவிடும் என்று சொல்ல கூட ஒரு தொடராவது தயாரித்து வெளிவந்து ஓடாமல் சென்றிருக்க வேண்டும் அதுவும் இல்லை. பின்பு எது தடுக்கிறது பொருட்செலவா? கோடி கோடியாய் பணம் போட்டு ஓரிரு நாள் ஓடி காணாமல் போகும் படங்களுக்கு மத்தியில் இது எவ்வளவோ மேல். காலம் முழுக்க OTT யிலாவது வாழ்ந்துக் கொண்டிருக்கும்.
தொடராக எடுப்பதன் ஒரு முக்கியமான நன்மை உலகம் முழுக்க பல மொழிகளில் சுலபமாக கொண்டு சேர்க்க முடியும். மேலைநாட்டு வரலாற்றையும், பழைய வாழ்க்கை முறைகளையும் பார்த்து பார்த்து வியந்துக்கொண்டிருக்கும் நமது கூட்டத்திலிருந்து ஒரு படைப்பாளி வந்து நமது பெருமையை எடுத்துக் காட்டிவிடமாட்டானா என்ற ஏக்கத்துடன் இந்த கட்டுரையை நிறைவு செய்கிறேன்.
நார்ஸ் இன மக்களின் நம்பிக்கைகள் மற்றும் புராணங்கள் பற்றி நிறைய அறிந்துக்கொள்ள இந்த புத்தகத்தை வாசிக்கலாம் - Norse Mythology